பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

சொல்லாமே என்னைப் பார்த்து சிரிச்சுது. அதைப் பார்க்கறபோது எனக்கு மனசு கஷ்டமா இருந்தது. பெத்தவ இருந்தா இப்படி ஒரு மங்களமான காரியம் நடந்ததைப் பெருமையான நாலு பேருக்குச் சொல்லுவா. வாசல்லே கோலம் போட்டுக் கொண்டாடித் தலைவாரிப் பூ வைச்சுப் பிட்டும், உருண்டையும் பண்ணி நாலு பெண்களைக் கூப்பிட்டுக் கொடுப்பா. யார் இருக்கா இதுக்கு அதெல்லாம் செய்ய? அனாதையா அழுக்குச் சித்தாடையைக் கட்டிண்டு மூலையிலே உட்கார்ந் திண்டிருக்கு.”

"ஐயோ பாவம்! நீயும் இந்த ஊர் அசல் மனிதர்களைப் போலப் பேசாமல் இருந்துவிடாதே. சாயங்காலமா யூசுப் ராவுத்தர் ஜவுளிக் கடையிலேயிருந்து ஒரு சீட்டிச்சிற்றாடை வாங்கிட்டு வந்து தரேன். வாசல்லே பூக்காரன் வந்தால் கொஞ்சம் பூவும் வாங்கிவைச்சுக்கோ.போய் ஏதோ முறையாய்ச் செய்வதை செஞ்சிட்டு வா.அது குளித்து வருகிற வரையில் அந்தச் சின்னப் பையனை இங்கே வந்து சாப்பிடச் சொல்லிவிட்டு வா. பட்டுவுக்கும் கொண்டு போய் போட்டுடு” என்று பரிவோடு சொன்னார் சிற்சபேசன்.

அவர் கூறியபடியே நடந்தது. சாயங்காலம் அவர் மனைவி ஒரு பழுக்காத் தாம்பாளத்தில் புதுச்சிற்றாடையும், பூவும் மஞ்சள் குங்குமமும் ஒரு டஜன் கண்ணாடி வளையலும் எடுத்து வைத்துப் புடவைத் தலைப்பால் மூடிக் கொண்டு பட்டுவின் வீட்டிற்குச் சென்றாள்.

போனவள் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டது.

“என்ன? பட்டு என்ன சொல்றாள்?” என்று விசாரித்தார் சிற்சபேசன்.

"அதை ஏன் கேக்கறேள்? நான் புதுச்சித்தாடையும் பூவுமாய் போய் நின்னதும் அந்தப் பெண் ஒரே பிடிவாதமா 'இதெல்லாம் வேண்டாம் மாமி’ன்னு அடம் பிடித்தது.'நான் பிறந்து வளர்ந்த சீருக்கு இதெல்லாம் இல்லைன்னு ஒரு குறையா? நீங்க ஏன் வீணா சிரமப்படனும்?' என்று சிரிச்சுண்டே சொல்லிற்று. அதுக்கில்லையடி பெண்ணே! இதெல்லாம் வழக்கம்டி! ஆயிரம் கஷ்டமானாலும் முறையை விடப்படாது. நல்லது நாளைக்கு வருமா?’ என்று நானாக வற்புறுத்திச் சொல்லி, எல்லாம் செய்துவிட்டு வந்தேன்” என்றாள் அவர் மனைவி.

“என்னவோ, இதிலே நமக்கு ஒரு திருப்தி அவ்வளவுதான்” என்று மனநிறைவோடு சொன்னார் சிற்சபேசன்.

“இத்தனை நாட்கள் முகத்தைச் சுளிக்காமல் உழைச்சுது, சம்பளம்னு ஏதோ கொடுத்தோம். ஆனால் அது உழைச்சதுக்கு நீங்க கொடுத்த நாலைந்து ரூபாய் காசு காணவே காணாது. பெரிசாப் போனப்புறம் இன்னமே எங்கே வீடு வீடா வாசல் பெருக்க வரப்போறது?’ என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டாள் சிற்சபேசனின் மனைவி.

"அப்படியானால் இனிமேல் பட்டு வேலைக்கு வரமாட்டாள் என்கிறாயா?”