பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328*நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


எடுத்திண்டிருக்கேன். ஊரார் எப்பவுமே நாலு விதமாய்ப் பேசறவங்கதான். பட்டினி கிடந்தா ஏன்னு கேட்க இந்த ஊராருக்குத்துப்பு இருக்கா? அவங்க என்ன பேசினாலும் கேட்க நான் தயாரில்லை.”

“சரி! நான் எனக்குப் பட்டதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு வேப்பமரத்தடியிலிருந்த சிமண்டு மேடையில் உட்கார்ந்தார் சிற்சபேசன். வழக்கம்போல் கிழக்கே சூரியோதயக் காட்சி கிராமத்துக்கே உரிய அசல் அழகோடு தெரிந்துகொண்டிருந்தது. பட்டு வேகமாகப் பெருக்கத் தொடங்கியிருந்தாள். சிறிதுநேரம் கழித்து வீட்டுக்குள்ளே போவதற்காக அவர் எழுந்திருந்தபோது பட்டு பெருக்கி முடித்துவிட்டு மரத்தடியில் வேப்பம் பழம் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

“இந்த வேப்பம்பழம் தின்கிற கெட்ட பழக்கம் இன்னும் உன்னிடமிருந்து போகவில்லையே? உன் பழக்கமே உலகத்தோட ஒட்டாமே தனியா இருக்கு! எல்லாருக்கும் வாய்க்கு ருசியா ஏதாவது பழம் பிடிக்கும்னா உனக்கு மட்டும் வாயை நாற அடிக்கிறதுலேயே பிரியம்” என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே கேட்டார் சிற்சபேசன்.

“என்ன சார் செய்யறது? சின்ன வயசிலேயிருந்தே எனக்கு இந்தக் கசப்பிலே ஒரு பிரியம். இந்தப் பழத்தைச் சாப்பிட்டுப் பழகிட்டேன்.இந்தப் பழத்தினோட கசப்பிலே ஒர் அசட்டுஇனிப்பும் இருக்கு சார்?' என்றாள் நிஷ்களங்கமாகச் சிரித்துக் கொண்டே

பட்டு சொன்ன வார்த்தைகளை அவள் ஒரே அர்த்தத்தை நினைத்துக் கொண்டுதான் சொல்லியிருக்க முடியும்! ஆனால், சிற்சபேசனுக்கு எத்தனையோ அர்த்தங்கள் அந்த வார்த்தைகளிலிருந்து கிடைத்தன.

“பட்டுவுக்கென்ன? கசப்பாயிருக்கிற எதுவுமே அவளுக்குச் சின்ன வயசிலிருந்தே பழக்கம்! பழகினால் கசப்பைப் போல் சுவை வேறே இல்லை” என்று தமக்குள் மெல்ல முணுமுணுத்துக்கொண்டார் சிற்சபேசன்.

(கல்கி, 15.11.1959)