பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41. புதிய விளம்பரம்


ராகமூத்தி தம் அருமைப் பெண் பத்மாவைக் கடிந்து கொண்டார்.

“ஏனம்மா, நீ என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதா? நான் நாலு ‘செட்’ தைத்து அனுப்பியிருப்பேனே...? ‘கம்பெனி கீப்’ பண்ண வேணுமோல்லியோ? உன் தோழிகளெல்லாம். ‘பாட்மிட்டன் கோர்ட்’டுக்குப் போற போது ‘யூனிபாரமா’ இந்த ‘டிரஸ்’தான் உபயோகிக்கிறேன்னா, நீயும் ஏன் போட்டுக்க ப்படாது…?”

வராகமூர்த்தியின் பெண் கையில் பூப்பந்து மட்டையோடு தன் தோழிகளுடன் விளையாடப் புறப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் மேற்படிபிரச்னை எழுந்தது. பூப்பந்து விளையாடப் பெண்களுக்கென்று அந்தக் ‘கண்டோன்மெண்ட்’ பகுதியில் இருந்த அழகிய புல் தரையோடு கூடிய விளையாட்டுக் கூடத்துக்குத்தான் அவர்கள் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு பேரிலும் கர்நாடகமாகக் காட்சியளித்தவள் வராகமூர்த்தியின் பெண் பத்மாதான்.

மற்றப் பெண்கள், உடம்பை இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆணுடையில் காட்சியளித்தனர். மார்புக்கு மேலே சிவப்பும் கீழே வெண்மையுமாக இரு வண்ணத்தில் விளையாட்டு உடை பாணியில் அது இறுக்கமாகவும், பிடித்தமாகவும் இருந்தது. அரையில் முழுக்கால் சட்டை ‘பாப்’ செய்த தலையேயானாலும், ஆறு கஜம் ஜார்ஜெட் சேலையும், முழங்கை தொடும் சோளியுமாக அவள் அந்தப் பெண்கள் கூட்டத்தில் தனிப்பட்டவளாகக் காட்சியளித்தாள். ரோஜாப் பூக்களின் குவியலுக்கு நடுவே எப்படியோ தப்பித் தவறி ஒர் அரளிப் பூவும் விழுந்து கிடப்பது போல் அவளுடைய கோலம் அங்கே மாற்றுக் குறைந்து, பொருத்தமின்றி விளங்கியது.

அதைத்தான் வராகமூர்த்தி மகளிடம் குறிப்பிட்டுச் சொல்லிக் கடிந்து கொண்டிருந்தார். “எனக்கெதுக்கு அப்பா இதெல்லாம்?” என்று சொல்லி விட்டுப் புள்ளி மான் குதித்தோடுவது போல் பந்தாடும் மெல்லிய மட்டையைச் சுழற்றிக் கொண்டே தோழிகளோடு குதித்து ஓடி விட்டாள் பப்பி.

‘அவள் வேண்டாம்’ என்று சொன்னதற்காக வராக மூர்த்தி சும்மா இருந்து விடுவதா, என்ன? அப்புறம் அவருடைய கெளரவம் என்ன ஆவது? எந்தப் பரதைப் பயல் வீட்டுப் பெண்களெல்லாமோ நாகரிகம் கொண்டாடுகிற போது ஊரிலேயே பெரிய ஜவுளிக்கடைக்குச் சொந்தக்காரரான என் பெண்ணுக்கு ஏன் குறை வைக்க வேண்டும்? லட்சாதிபதிகள், இரண்டு மூன்று கோடீசுவரர்கள் உள்பட அந்தஸ்தை வெளிக்காட்ட முயலும் தகுதி உள்ளவர்கள் வசிக்கின்ற இடமாயிற்றே அது? ‘பாரீஸ் நாகரிகத்’தைப் பச்சையாகக் கடைப்பிடிக்கின்ற இடம் இல்லையா அது?