பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


'பணத்தின் அடித்தளத்தின் மீதிருந்த பாவனை' என்கின்ற பீடு ஒரு காலத்தில் பணக்கார ஆண் பிள்ளைகளின் பெருந்தன்மையில் நிலவியிருந்திருக்கலாம். அதெல்லாம் பழைய விவகாரம். இப்போதெல்லாம் அது பணக்கார வீட்டுப் பெண் பிள்ளைகளின் ஆடையிலும், உயர் குதிச் செருப்பிலும் அடங்கிப் போய்விட்டது. நட்புக்கு உரியவர்களுடன் இருக்கும்போது ஒரே வகைத் தோற்றம் கொண்டு அமைய வேண்டியது பட்டணக் கரைக்கு மிக இன்றியமையாத ஒரு விவகாரம்!

எத்தனையோ விலையுயர்ந்தரகத் துணிகள் குவிந்து கிடக்கும் பிரம்மாண்டமான ஜவுளிக் கடையின் சொந்தக்காரரானவராக மூர்த்தியிடம் தையல் தொழிலில் பட்டம் வாங்கின ஆறு தையற்காரர்கள் அவர் கடையில் வேலை பார்க்கிறார்களே! மறுநாள் சாயங்காலம் பப்பி விளயாடக் கிளம்புவதற்கு முன்பே நாலு இணை காற் சட்டையும் விளையாட்டு மேலங்கியும் தயாராகி விட்டன!

அவள் அதை அணிந்துகொண்டு 'கம்பெனி கீப்' பண்ணுகிற அழகைப் பார்ப்பதற்காக வராகமூர்த்தி ஜவுளிக் கடையிலிருந்து வீட்டுக்குக் கிளம்பினார்.

"பப்பீ, ரொம்பவும் பிரமாதம்மா கிளப்பிலிருந்து திரும்பறபோது நினைவாக ஸ்டுடியோவுக்குப் போய் ஒரு போட்டோ எடுத்துக்கோ. 'காபினட்' அளவில் உடனே ஒரு காப்பி போட்டுத் தரச் சொல்லு. வீட்டுக்கு அழகாகக் கண்ணாடி போட்டு மாட்டிக்கிடுவோம்” என்று கூறி வியந்தார் வராக மூர்த்தி.

மூன்று நாட்கள் கழித்து, வராகமூர்த்தியின் வீட்டு முன்புற ஹாலில் பப்பியின் அந்தக் கோலம் கண்ணாடிக்குள் சட்டமிடப்பட்டு அழகு பூத்துக் கொண்டிருந்தது. கையில் ஒயிலாக ஓங்கிய பூப்பந்து மட்டையோடு அந்த விளையாட்டு உடைகளில், அவளைக் கவர்ச்சிகரமாகப் பிடித்திருந்தான் புகைப்பட நிபுணன்.

பப்பி அன்றிலிருந்து தொடர்ந்து தோழிகளுடன் இணைந்திருந்து ஒர் ஒருமைப்பாட்டை உண்டு பண்ணிக்கொண்டு வந்தாள். வராகமூர்த்தி மனம் பூரித்துக்கொண்டு வந்தார்.

பப்பி பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றாள். உள்ளுரிலும்’ வெளியூரிலும் 'விளையாட்டுப்பத்திரிகைகள்' அவளைப் பிரமாதப்படுத்திப் புகழ்கிற அளவுக்கு விளையாட்டிலே முன்னேற்றம் அடைந்துவிட்டாள். முன்னேற்றத்திற்குத் தக்கபடி ஒரு வெளித் தோற்றமும் முன்னேறிக் கொண்டு வந்ததில் வியப்பில்லையல்லவா?

ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு இரண்டு மாதம் இருக்கும்போது, தம் ஜவுளிக் கடையின் முகப்பில் இருக்கும் அலங்கார விளம்பரக் கண்ணாடிக் கூண்டில் ஏதாவது, புதுக்கவர்ச்சியான விளம்பர முறையைக் கையாண்டு கூட்டத்தைக் கவர்வது வராகமூர்த்தியின் வழக்கம். திரைச் சந்தையில் பேருள்ள 'நட்சத்திரம்' மாதிரி 'பிளைவுட்' பலகையில் சித்திரம் எழுதிப் பெரிதாக அலங்கரித்துக் கண்ணாடியில் வைப்பார் பக்தி பூர்வமாக, கிரஷ்ண பரமாத்மா கோபிகா ஸ்திரீகளின் வஸ்திரத்தைக்