பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பலகையில் இருந்தது. மூக்கு முழி முகம் எல்லாம் அச்சாக அவளேதான்!. விளம்பரக் கவர்ச்சிக்காகத் திருத்தம் செய்திருந்தான் ஒவியன்.

"அப்பா என்ன காரியம் இது? ஏன் இப்படிச் செய்தீர்கள்?"

"ஐயோ!. எனக்கு ஒரு மண்ணும் தெரியதம்மா!.... நான் செய்வேனா இப்படி?” என்று மகளைச் சமாதானப்படுத்தி விட்டு “எங்கே அந்த அக்கிரமக்கார ஒவியன்?” என்று கூச்சலிட்டார் வராக மூர்த்தி,

"நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள் அப்பா! உங்களுடைய முகத்தில் விழிக்கவே சங்கடமா இருக்கிறது எனக்கு!' என்று அழுகையும் விசும்பலுமாகக் கூறி, அவரை நம்ப மறுத்து, வீட்டுக்கு ஓடி விட்டாள் பப்பி.

மகளே நம்ப மறுத்துத் தம்மேல் குற்றம் சாட்டி விட்டு ஓடியதைப் பார்த்தபோது, வராக மூர்த்தியின் கொதிப்பு அதிகமாயிற்று.

ஒவியனை அழைத்தார். ஆத்திரம் வளர்ந்தது!

ஒவியன் வந்து நின்றான். பளீரென்று கன்னத்தில் ஒர் அறை வைத்து விட்டுக் கேட்டார். "எதைப் பார்த்து இதை வரைந்தாயடா ராஸ்கல்? உள்ளதைச் சொல்லி விடு!”

அவன் பேசாமல் 'விளையாட்டுப் பத்திரிகை'யை எடுத்துக் காண்பித்தான். இரண்டு வருஷத்துக்கு முந்திய இதழ் அது. அதில் அவர் பெண்ணின் அந்தப் படம் அதே கோலத்தில் வெளியாகியிருந்தது.

“முட்டாள். இது என் மகள் படமடா! பிழைத்துப் போ!” அந்தப் பலகைப் படத்தைச் சுக்கு நூறாக உடைத்து விட்டு வெந்நீர் அடுப்புக்கு அனுப்பி வைத்தார் வராகமூர்த்தி.

“அந்த ஏற்பாடு தானாகச் செய்ததில்லை. ஸ்போர்ட்ஸ் இதழொன்றில் வந்திருந்த அவள் படம் நல்ல கவர்ச்சிகரமான அமைப்பில் இருந்ததினால், விளைந்த வம்பு!” என்று பப்பியை நம்பச் செய்து, தாம் நல்லபிள்ளையாவதற்கு மிகவும் சிரமப் பட்டார் வராக மூர்த்தி,

“என்ன ஐயா வராக மூர்த்தி! இந்த வருஷம் உம் ஷோகேஸில் ஒண்ணுமே இல்லையே?. இருண்டு வழிகிறது! கம்பெனி கீப் பண்ணவாவது ஏதாவது வைக்கப் படாதோ..?” என்று பக்கத்து ஜவுளிக் கடைக்காரர் ஒரு நாள் கேட்டார்.

"கம்பெனி கீப் பண்ணற விவகாரத்தையே விட்டுட்டேன். நாம இருக்கிறபடி இருந்தாப்போதும்” என்று வராக மூர்த்தியிடமிருந்து அழுத்தமாகப் பதில் வந்தது!

(1959)