பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42. வலம்புரிச் சங்கு.[1].

பூமாலை யோசித்துப் பார்த்தான். அன்றைக்குச் சங்கு குளிக்கப் போவதா? வேண்டாமா? என்று எண்ணினான். குடிசைக்குள் அவன் மனைவி கோமதி வலி பொறுக்க முடியாமல் முனகிக் கொண்டிருந்தாள். எப்படியும் அன்றைக்கு உச்சிப் போதுக்குள் குழந்தை பிறந்து விடும் என்று மருத்துவச்சி சொல்லி விட்டுப் போயிருந்தாள்.

“ஏலே, பூமாலே இன்னிக்கு ஒரு நாளைக்குப் போவாட்டிஎன்னடா குடிமுழுகிப் போச்சு? குழந்தை முகத்தைப் பார்த்திட்டுப் பிறகு போகலாம்டா” வயதானவளாகிய அவன் தாய் கூறினாள்.

“அதுக்கில்லே அம்மா! வருஷம் முழுதுமா சங்கு குளிக்க முடியுது? ஏதோ இந்த இரண்டு மூணு மாசத்திலே நாலு காசு பாத்தால்தானே உண்டு.”

“காசு கிடக்குதடா விடு! தாயும் குழந்தையுமா இவங்களைப் பார்க்கிறதை விடவா காசு பெரிசு?”

“சரி, உன் இஷ்டம் இருக்கேன். கண்டிராக்டர் எசமான் கூப்பிட்டு விடாமல் இருக்கணும்!” - பூமாலை குடிசையிலேயே தங்கிவிட்டான். அன்று அவன் சங்கு குளிக்கப் போகவில்லை.

சங்கு குளிக்க மற்ற ஆட்கள் வந்திருந்தார்கள். ஆனால் கண்டிராக்டர் பரமசிவம் பிள்ளையைப் போல வேகமாகச் சங்கு குளிக்கக் கூடிய ஆட்கள் அந்தப் பிரதேசத்திலேயே வேறொருவரும் இல்லை. சல்லடத்தைக் கட்டிக் கொண்டு கடலில் குதித்தால் பொழுது சாய்வதற்குள் சங்குகளை வாரிக் குவித்து விடுவான். மற்றக் கூலிக்காரர்களோ, பத்து இருபது சங்குகளைக் குளிப்பதற்குள்ளேயே மூச்சுத் திணறிக் கூலியை வாங்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். நான்கு மாதங்கள்தான் அவரது கண்டிராக்டின் ஆயுள். ஆயிரக்கணக்கான பணத்தைக் கொட்டிக் கண்டிராக்டு’ எடுத்திருந்தார். இந்த நான்கு மாதங்களுக்குள் லாபம் பார்த்தால்தான் உண்டு. இல்லையானால் நஷ்டமடைந்து கையைச் சுட்டுக் கொண்டு போக வேண்டியதுதான். “இன்றைக்கு ஏண்டா பூமாலையை இன்னும் காணோம்?” என்று கேட்டார் பரமசிவம்.

“அவன் பொஞ்சாதி பிள்ளைத்தாச்சியா இருக்காங்க. அதுக்கு இன்றைக்கு நாளுங்க. அதனாலே அவன் வரமாட்டானுங்க.”


  1. கல்கி சிறுகதைப் போட்டிப் பரிசு பெற்றது.