பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“நான் கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னேன்னு போய்க் கூட்டிக்கிட்டு வாடா!... உடனே திரும்பிடலாம்னு சொல்லு. அப்பொழுதுதான் பயல் வருவான்...”

கண்டிராக்டர் பரமசிவம் பிள்ளையின் கட்டளையைச் சிரமேல் தாங்கிக் கொண்டு பூமாலையைக் கூட்டி வருவதற்குப் புறப்பட்டான் ஒரு கூலியாள்.

காலை எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் முதல் கப்பல் புறப்படுவதற்குத் தயாராக ஒலியை முழக்கிக் கொண்டிருந்தது. துறைமுகத்தில் போவோரும் வருவோருமாக ஒரே கூட்டம். கடல் நீரின் முடை நாற்றத்தை ஏற்றுமதி இறக்குமதிக்காகக் குவிக்கப்பட்டிருந்த சாமான்களின் வாடை அமுக்கிக் கொண்டிருந்தது. பரமசிவம் பிள்ளையும், அவருடைய கூலியாட்களும் பூமாலையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சங்கு குளிக்கச் செல்ல வேண்டிய பகுதி கடலில் சிறிது தொலைவு தள்ளி இருந்தது. அங்கே போவதற்குப் பெரிதும் சிறிதுமாகப் படகுகள் துறைமுகத்தில் தயாராக இருந்தன.

போனவன் அரை நாழிகையில் பூமாலையோடு திரும்பி வந்து சேர்ந்தான்.

“ஏண்டா பூமாலே! குழந்தை பிறந்தால் வீட்டிலேயிருந்து ஆள் அனுப்ப மாட்டாங்களா? அதற்காக நீ வீட்டிலேயே இருக்கணுமோ?” என்று கேட்டார் பரமசிவம்.

"இல்லீங்க. அம்மா சொல்லிச்சுங்க... இன்றைக்கு ஒரு நாளைக்கு மட்டும் போகவேண்டாம்னு.”

“போடா போ! ஒரு நாள் சம்பாத்தியத்தை வீணாக்கனும்கிறாயே, சல்லடத்தைக் கட்டிக்கிட்டு வேலையைப் பாருடா குழந்தை பிறந்த தகவல் வந்த உடனே உன்னை வீட்டுக்கு அனுப்பிச்சுடறேன்.”

“இல்லை எசமான்! இன்றைக்கு வேண்டாமுங்க... என் மனசு சரியாயில்லீங்க. ஞாபகத்தை எல்லாம் வீட்டிலே வைச்சுகிட்டு இங்கே வேலை செய்யறதுன்னா..?”

“அட சரிதான்! பெரிய மனசைக் கண்டவன் கணக்காகப் பேசுகிறாயே? நான் சொல்கிறேன் கேளு பூமாலை' பரமசிவம் பிள்ளை வற்புறுத்தினார்.

பூமாலை துணிந்து மறுக்கும் சக்தியை இழந்தான். வேறு வழியில்லை. சல்லடைத்தைக் கட்டிக் கொண்டு மற்றக் கூலியாட்களோடு படகில் ஏறி உட்கார்ந்து கொண்டான். கண்டிராக்டர் பிள்ளை பூமாலையைச் சம்மதிக்க வைத்த மகிழ்ச்சியோடு தாமும் ஒரு தனிப் படகில் ஏறி உட்கார்ந்து கொண்டார். படகுகள் முத்துக் குளித்தல், சங்கு குளித்தல் முதலியவற்றுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கடல்பகுதியை நோக்கிச் சென்றன.

விநாடிக்கு விநாடி பின்னுக்கு நகர்ந்து மங்கிக் கொண்டிருக்கும் துறைமுகத்தையும், ஊரையும், கரையையும் வெறித்துப் பார்த்தவாறே படகில் போய்க் கொண்டிருந்தான் பூமாலை. அவன் மனதில் நிம்மதி இல்லை. வழக்கம் போல் நிறையச் சங்குகளை வாரிக் குவிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. வேண்டா வெறுப்பான ஒரு மனநிலை.