பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“சரி, செய்து பார்!...” பூமாலை முங்கினான். அவன் தலை தண்ணீருக்குள் மறைந்ததும் கரைப் பக்கமிருந்து படகு ஒன்று வருவதைக் கவனித்தார் பரமசிவம் பிள்ளை. படகு அருகில் வந்தது. பூமாலையின் தம்பி அதைச் செலுத்திக் கொண்டு வருவதைக் கவனித்தார் அவர்.

அவனுடைய தோற்றத்தையும் முகபாவத்தையும் கவனித்ததுமே அவருக்குத் தெரிந்து விட்டது விஷயம்.

“என்னடா இவ்வளவு அவசரமாய்ப் படகிலே வந்திருக்கே?”

"கோமதி மதினி காலமாயிடிச்சுங்க. அண்ணனைக் கூட்டிட்டுப் போக வந்தேன்.”

"ஐயையோ குழந்தை பிறக்கலையாடா?”

“அது பொறக்கும்போதே செத்துப் போய்த்தான் பிறந்திச்சிங்க. மதினி அதுக்கப்புறம் வலி எடுத்து வேதனை தாங்க முடியாமே...”

“அட கண்றாவியே..!” அவர் பூமாலையின் தம்பியை விசாரித்துக் கொண்டிருந்தபோது, கடல் நீர் அலம்பி வடிந்தது. பூமாலை குபுக்கென்று வெளியே வந்தான்.

“எசமான், எசமான்! இதோ பாருங்க, என் கையிலே 'வலம்புரிச் சங்கு!’ அதிர்ஷ்டம்னா இதுல்லே அதிர்ஷ்டம்!” - பூமாலை மூச்சுத் திணறி நீரின் மேல் தத்தளித்துக் கொண்டே வலது கையை அலைக்கு மேல் உயர்த்திக் காட்டினான். எல்லோரும் வியப்புத் தாங்காமல் திரும்பிப் பார்த்தனர்.

“வலம்புரி சங்கு' என்றால் சாதாரணமானதா அது? ஒரு சங்கே லக்ஷக்கணக்கில் விலை போகக்கூடியது. நூறு இருநூறு வருஷங்களுக்கு ஒரு முறை எப்போதாவது அபூர்வமாகக் கடலில் கிடைக்கக்கூடியது. அதை வைத்திருப்பவர்களுக்குச் சகல சித்திகளும் கூடிவரும் என்பதனால் சமஸ்தானாதிபதிகளும் கோடீசுவரர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவதற்கு ஓடி வருவார்கள்.

பரமசிவம் பிள்ளை கண்களை அகல விரித்துப் பார்த்தார். பூமாலையின் கையில் ஒரு நல்ல செவ்விளநீர் அளவுக்கு வலப்புறம் வளைந்து திருகிய அற்புதமான வலம்புரிச் சங்கு ஒன்று இருந்தது. ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். பூமாலை அதைப் படகில் வைக்கக் கையைத் தூக்கினான்.

"அண்ணாச்சி கோமதி மதினி காலமாயிடிச்சு. ...விக்கி அழுது கொண்டே பூமாலையின் தம்பி அவன் அருகில் படகைக் கொண்டு வந்தான்.

விலை மதிக்க முடியாத அந்த வலம்புரிச் சங்கு பரமசிவம் பிள்ளையின் படகில் விழுவதற்குள் பூமாலையின் கையிலிருந்து நழுவிக் கடலில் விழுந்தது.

"ஐயோ! பூமாலை. அது ஆழத்திலே போகுதுடா. எடு! எடு! எடுடா... லக்ஷக்கணக்கில் பெறுண்டா.”- அவர் இரைந்து கத்தினார்.

பூமாலை எடுக்கவில்லை. தம்பியின் படகைப் பிடித்துக் கொண்டு உணர்வுகளைச் சோகத்தில் புதைத்துக் கொண்டிருந்தான் அவன்.