பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வலம்புரிச் சங்கு 337

பரமசிவம் பிள்ளை துடித்தார்.பூமாலை அசையவில்லை."டேய்! அப்புறம் சோறு தின்னலாம்; நீங்க குதிச்சு எடுங்கடா!” சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றவர்களைத் தூண்டினார். அத்தனை கூலியாட்களும் உடனே சாப்பிடுவதை நிறுத்திவிட்டுத் தண்ணீரில் குதித்தனர். தமக்குத் திடீரென்று கிடைத்த வலம்புரிச் சங்கை இழந்த சோகத்தில் அவன் மனைவியையும் குழந்தையையும் இழந்து நிற்கிறான் என்பதுகூட அவருக்கு மறந்து போய்விட்டது.

“அட நாசமாய்ப் போகிற பயலே! அவன் சங்கைப் படகில் வைத்துவிட்டுக் கரையேறின.பின் உன் சமாசாரத்தைச் சொல்லித் தொலைச்சா என்ன! நல்ல சமயத்தில் கெடுத்து விட்டாயேடா! ’அவர் பூமாலையின் தம்பியைத் திட்டினார். அந்தச் 'சின்னப் பயல்’ அவரை முறைத்துப் பார்த்தான். பூமாலை கேவிக் கேவி அழுது கொண்டிருந்தான். அவன் தம்பி கைகொடுத்துத் துக்கி அவனைப் படகுக்குள் ஏற்றிக்கொண்டு கரையை நோக்கிச் செலுத்தினான்.

பரமசிவம் பிள்ளை உள்ளே முங்கிய மற்றக் கூலிகளை எதிர் பார்த்து ஆவலோடு காத்திருந்தார். ஒவ்வொருவனாக வெளிவந்தான்.

“எசமான்! அது அகப்படலீங்க” அத்தனை கூலிகளும் இதே பதிலைத்தான் கூறினார்கள். திடீரென்ற கண் பெற்றுப் பிறகு உடனேயே பழைய குருடனாக ஆனாற்போல இருந்தது அவர் நிலை. இன்னும் பத்து வருஷங்கள் இதே கண்டிராக்டு எடுத்தாலும் பெற முடியாத லட்சாதிபதிப் பதவியை இந்த ஒரே ஒரு வலம்புரிச் சங்கின் மூலம் அவர் பெற்றிருக்க முடியும். அதைப் பூமாலை கெடுத்து விட்டான்! பூமாலையின் தம்பியையும் அவன் கொண்டுவந்த இழவுச் செய்தியையும் அவர் வாய் ஒயத் தூற்றினார்.

‘எப்படியும் அந்த வலம்புரிச் சங்கை எடுக்காமல் விடுவதில்லை' என்று உறுதி பூண்டுவிட்டார் அவர் கூலிகளைத் திரும்பத் திரும்ப அதே இடத்தில் மூழ்கச் செய்தார். சங்கு குளிப்பதில் பூமாலைக்கு அடுத்தபடி திறமைசாலிகளான வேறு சிலரை வருவித்துக் குளிக்கும்படி ஏவினார். எல்லோரும் சேர்ந்து ஏமாற்றம் ஒன்றையே அவருக்கு அளித்தார்கள்.வலம்புரிச்சங்கு கிடைக்கவே இல்லை.ஏமாற்றத்தின் நடுவே விளைகின்ற ஆத்திரம் பஞ்சுப் பொதியின் இடையே விழுகின்ற நெருப்புத் துண்டு போலப் பயங்கரமானது.

நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு 'போலீஸ் ரிப்போர்ட்' செய்வது என்ற முடிவுக்கு வந்தார் பரமசிவம் பிள்ளை.

“என்னிடம் வெகு நாட்களாகச் சங்கு குளிக்கும் கூலியாக வேலை பார்த்துவரும் பூமாலை என்பவன் நேற்றுக் காலை லக்ஷக்கணக்கான ரூபாய்கள் விலையுள்ளதும் எனக்குச் சேர வேண்டியதுமான ஒரு வலம்புரிச் சங்கைக் கடலில் எறித்துவிட்டான். அவன் எறிந்த இடத்தில் அவனையே மூழ்கச் செய்து அந்தச் சங்கை எடுத்துக் கொடுத்து உதவவேண்டும். அல்லது அவனைத் தகுந்த நடவடிக்கையின்பேரில் சரியானபடி தண்டிக்க வேண்டும்."

நா.பா.1 - 22