பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் வெயிலில் நெடுவழி கடந்து நாவறண்டுபோன சமயத்தில் நல்ல இளநீரும் குளிர்ந்த மரநிழலும் கொடுத்த இன்பத்தில் பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரின் முகங்களும் மலர்ந்தன. கிராமத்தின் எல்லையில் இருந்த அந்த ஆலமரத்தின் நிழல் அவர்களுக்கு அதிகமாகப் பிடித்துவிட்டதால் தங்கசாமி தன் கந்தல் துணிக் கூடாரத்தை அங்கேயே போட்டான். பிறகு கிராமத்தில் வேலைதேடி இரண்டு மூன்று நாட்கள் அலைந்தான். ஒன்றும் கிடைக்கவில்லை. பக்கத்துரில் இருக்கும் பஞ்சாலையில் வேலைக்கு ஆள் எடுப்பதாக யாரோ சொன்னார்கள் வழியை விசாரித்துக் கொண்டு பஞ்சாலையை நோக்கி பசியையும் பொருட்படுத்தாமல் போனான். ஒரு மைல் நடப்பதற்குள்ளாகவே அந்தப் பஞ்சாலையின் பிரம்மாண்டமான பெரிய உருவம் கம்பீரமாகத் தெரிந்தது. இவ்வளவு பெரிய உருவம் நம்மோடு போட்டியிட்டால் நம்மால் எதிர்த்து நிற்க முடியுமா என்ன? என்று உள்ளம் தளர்ந்து பெருமூச்சுவிட்டான் தங்கசாமி. ஆம்! அவ்வளவு பெரிய போட்டிதான் கைத்தறித் துணிக்கும், மில் துணிக்கும் மார்க்கெட்டில் நடந்தது. இறுதியாக அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது யார்? பூஊம். ம்..ம். என்று அப்பொழுது அந்த ஆலை மில் சில நிமிஷநேரங்கள் தன் வெற்றிச் சங்கநாதத்தை ஊதியது. ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் அதன் அழைப்பை ஏற்றுக் கொண்டு உள்ளே போனார்கள். தங்கசாமியும் போனான். தான் வந்த விஷயத்தை விளக்கமாகச் சொல்லி தன்னை உள்ளே விடுமாறு வேண்டினான். அவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த காவலாளி வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.ஆனால் அவன் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு போர்டைச் சுட்டிக் காட்டினான். தங்கசாமியைப் போன்று ஆயிரமாயிரம் பேர்களுக்குப் பதில் சொல்லி அவர்களை அனுப்பி வைத்த அந்த அழகான போர்டு தங்கசாமியின் கண்களில் தென்பட்டது.அந்தப் பச்சைநிற போர்ட்டில் இரத்தச்சிவப்பு வர்ணத்தால் எழுதப்பட்ட வேலை காலி இல்லை என்ற மூன்று வார்த்தைகளும் பளபளத்தன. வார்த்தைகளின் பளபளப்பு தங்கசாமியின் கண்களைக் கூசின. கண்களைக் கைகளால் மூடிக் கொண்டு திரும்பி நடந்தான் தங்கசாமி. வயிறு காய்ந்தது; மழலைகளின் சிரித்த முகம் வாடியது. பசிக்கு அதிகப் பழக்கமில்லாத தங்கம் சோர்ந்து போனாள். நிலைமையைச் சமாளிக்க மானத்தை விட்டு வெட்கத்தை விட்டு யாசகம் கேட்கச் சென்றான் தங்கசாமி.யாசகமும் கிடைக்க வில்லை. ஆனால் "ஆளை பாரு ஆறடி இருக்கிறாயே! உழைத்துப் பிழைக்கக் கூடாதா?’ என்ற வசைவுகளும், திட்டுகளுமான வாசகங்கள் நிறையக் கிடைத்தன. தங்கசாமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையை மோவாய்க்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு யோசித்துக் கொண்டே இருந்தான். அப்பொழுது அவனுக்குப் பக்கமாகக் காக்கைகள் கூட்டம் ஒன்று கரைந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு பிச்சைக்காரக் குழந்தை தான் பொறுக்கி வந்த எச்சிலிலைகளில் ஒட்டியிருந்த பருக்கைகளை உதிர்த்துக்கொண்டு இலைகளை விட் டெறிந்துகொண்டிருந்தது.அந்த எச்சிலிலைக்குத்தான் அப்படி அடித்துக்கொண்டன காக்கைகள். .