பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பெரும்பான்மை பொய்யும் சிறுபான்மை மெய்யும் கலந்த இந்த ரிப்போர்ட்டை, போலீஸுக்கு மறுநாள் காலையில் பரமசிவம் பிள்ளை அனுப்பி வைத்தார். அதோடு நேரில் போய்ப் போலீஸ் இன்ஸ்பெக்டரைச் சந்தித்து "சார், நீங்கள் அந்தப் பயலை மிரட்டி அழைத்துக்கொண்டு வந்தால் எப்படியும் சங்கைப் போட்ட இடத்திலிருந்து எடுத்துக் கொடுத்துவிடுவான்” என்று அவர் கூறியிருந்தார்.

"நீங்கள் சங்கு குளிக்கும் துறையில் தயாராக இருங்கள்! நான் அந்தப் பயலுடைய குடிசைக்குப் போய் ஆளை அதட்டி அங்கே இழுத்துக்கொண்டு வருகிறேன். எப்படியும் அந்த வலம்புரிச் சங்கை எடுத்துவிடச் செய்வோம்” என்று இன்ஸ்பெக்டரும் வாக்களித்தார்.

வலம்புரிச் சங்கு என்றால் அது இலேசான விஷயமா? பரமசிவம் பிள்ளை தலைகீழாக நின்றாவது அதை எடுத்தாக வேண்டும் என்று உறுதியான மனத்தோடு இருந்தார்.

குழந்தையையும், தாயையும் கொண்டுபோய்ப் பொசுக்கி விட்டு வந்த வேதனையோடு குடிசைத் திண்ணையில் சுருண்டு விழுந்துகிடந்தான் பூமாலை. நேற்றும் சரி, இன்றும் சரி, அவன் சாப்பிடவில்லை. எதுவும் தோன்றாமல் அழுது கொண்டேயிருந்தான். உள்ளே பூமாலையின் தாய் இரைந்த குரலில் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள்.

“வலம்புரிச்சங்கு கைநழுவிட்டுதேயின்னு துடிச்சானே தவிர அண்ணாச்சி சம்சாரத்தையும் குழந்தையையும் பறிகொடுத்திட்டு நிற்கிறாரேன்னு அந்தக் கண்டிராக்டர் கொஞ்சமாவது வருத்தப்படவில்லையே? அவனுக்கு என்ன திமிரு?” என்று தமக்குள் பரமசிவம் பிள்ளையைக் கறுவிக் கொண்டிருந்தான் பூமாலையின் தம்பி.

போலீஸ் இன்ஸ்பெக்டரும் இரண்டு மூன்று கான்ஸ்டபிள்களும் அமைதியாகக் குடிசை வாயிலுக்கு வந்தனர். திண்ணையில் சுருண்டு கிடந்த பூமாலையை அவன் துங்குவதாக எண்ணிக் கொண்டு கைத்தடியினால் தட்டினான் ஒரு கான்ஸ்டபிள். முழித்துக்கொண்டிருந்த பூமாலை துள்ளி எழுந்தான். இன்ஸ்பெக்டர் அவனை அருகில் வருமாறு சைகை காட்டி அழைத்துக்கொண்டு போனார். அவனிடம் விஷயத்தைக் கூறினால் அவன் ஏதாவது குழப்பம் விளைவிப்பான் என்று எண்ணியே அவர் இப்படிச் செய்தார்.

“என்னை எங்கே கூட்டிக்கிட்டுப் போறீங்க? நான் ஒண்ணும் தப்புத் தண்டாச் செய்யலிங்களே? குழந்தையையும் மனைவியையும் பறிகொடுத்திட்டுச் சாக மாட்டாமல் இருக்கிறவனை நீங்க வேறே.”

"ஏய் பூமாலைபேசாமல்வரமாட்டே? இப்போ நீ ஜெயிலுக்குப் போகும்படியான நிலை உனக்கு வந்திருக்கு அதிலிருந்து நீ தப்ப வேண்டுமானால் நான் சொல்கிறபடி ஒழுங்காகச் செய்து விடு”