பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / வலம்புரிச்சங்கு 339

“ஐயையோ! அப்படி நான் என்னங்க செய்தேன்? ஒரு பாவமும் தெரியாதுங்களே!” என்று அழுதான் அவன்.

“புளுகாதே, அப்பனே! நேற்று சங்கு குளிக்கிறபோது ஒரு வலம்புரிச் சங்கைக் கடலிலே போட்டுட்டே இல்லே? அதை இன்றைக்கு எடுத்துக் கொடுக்கலேன்னா ஜெயில்தான், அடிதான், உதைதான். ஆமாம், பார்த்துக்க."

“நான் அதை வேணும்னு போடலிங்களே? அதை எடுத்துக்கிட்டு வெளியிலே வந்தப்போ 'என் சம்சராம் பிரசவிச்சக் குழந்தையோடு செத்துப்போயிட்டாளுன்னும் தம்பி வந்து சொன்னாங்க. அந்த அதிர்ச்சியிலே அது தவறி விழுந்திடிச்சுங்க...”

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது! கண்டிராக்டர் பரமசிவம் பிள்ளை ‘ரிப்போர்ட்' பண்ணியிருக்காரு. நீ திரும்பக் குளிச்சு அதை எடுத்தாலொழிய உன்னை இலேசில் விட மாட்டோம்.”

இன்ஸ்பெக்டர் மிரட்டினார். கான்ஸ்டபிள்கள் பூமாலையைப் பிடித்து இழுத்தபடியே, அவன் ஒடிவிடாமல் ஜாக்கிரதையாகக் கொண்டு போனார்கள்.

துறையில் பரமசிவம் பிள்ளை ஆட்களோடும் படகுகளோடும் காத்துக் கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள் பூமாலையோடு வந்து சேர்ந்ததும் படகுகள் சங்கு குளிக்கும் இடத்துப் புறப்பட்டன.

முதல் நாள் வலம்புரிச் சங்கு விழுந்த இடத்துக்கு வந்ததும் படகுகள் அன்று போலவே வியூகமாக நிறுத்தப்பட்டன. இன்ஸ்பெக்டரும் பரமசிவம் பிள்ளையும் பூமாலையைத் தூண்டினர்.

“எசமான்! இப்பொழுது என் மனசு படுகிற சங்கடத்திலே என்னாலே தண்ணீருக்குள்ளே மூச்சு அடக்க முடியாதுங்க. இரண்டு நாளாகப் பட்டினி வேறே. இன்னைக்கு வேண்டாம். இன்னொரு நாள் பார்க்கலாமுங்க”

பூமாலை காலில் விழாத குறையாக அவர்களைக் கெஞ்சினான். ஆனால் அவர்கள் அவனை இறங்கித் தான் ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தனர். சல்லடமில்லை. பூமாலை அரை வேஷ்டியையே சல்லடம் மாதிரி வரிந்து கட்டிக்கொண்டான். எண்ணெய் படகில் இருந்தது. அதைத் தடவிக் கொண்டான். இன்னும் சிறிது நேரம் அவன் தாமதித்தால் அவர்களே பிடித்துத் தள்ளி விடுவார்கள் போல இருந்தது. மூச்சை அடக்கித் 'தம்' பிடித்துக் கொண்டு கடலில் குதித்தான்.

'வலம்புரிச் சங்கு கிடைத்து விடும்' என்று ஆவலோடு அவன் குதித்து மூழ்கிய இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் பரமசிவம் பிள்ளை.

கால் நாழிகை ஆயிற்று! அரை நாழிகை ஆயிற்று! அதற்கு மேலும் ஆயிற்று! பொறுமை இழந்த பிள்ளை வேறொரு ஆளையும் பூமாலையைப் பின்பற்றி அதே இடத்தில் குதிக்கச்சொன்னார். ஆள் குதித்தான். குதித்தவன் சீக்கிரமே எதையோ பற்றி இழுத்துக் கொண்டு மேலே வந்து விட்டான்.