பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43. தகுதியும் தனி மனிதனும்

கல் விளக்கின் எண்ணெய் வறண்டு போனது. ஏட்டுச் சுவடிகளை மடித்துக் குடலையில் போட்டு விட்டுப் படுக்கையை விரித்தார் முத்துமாரிக் கவிராயர். குறிஞ்சிப்பாடி ஊர் முழுவதும் அடங்கிப் போயிருந்தது. நடுச்சாமம் வரை கண் விழித்து எழுதியும் அந்தப் பிள்ளைத் தமிழில் இருபத்தேழு பாடல்களே முடிந்திருந்தன. கையில் நரம்புகள் யாவும் ரத்தம் கட்டிப் போய் ஒரே வலி. விளக்கு, கரண்டு போய்த் திரியும் எரிந்த பின், அணைந்து விட்டது. எரிந்து போன திரியிலிருந்து கிளம்பிய சுடர் நாற்றம் புகையாகப் பரவி மூக்கை வதைத்தது. கிழிந்து அழுக்கேறிப் போயிருந்த அந்தக் கோரைப் பாய்தான் அவருக்குச் சங்கப் பலகையைப் போல உபயோகப்பட்டு வந்தது. தலைக்கு எண்ணெயேறிப் பிதிர்த்துப் போயிருந்த ஒரு தலையணை. இவைதாம் முத்துமாரிக் கவிராயரின் படுக்கை

நாகரிகம் முற்றிக் காகிதம், பேனா வந்த காலமாக இருந்தும், ஏட்டிலேயே எழுதி எழுதிப் பழகியிருந்த கவிராயர், அந்தப் பழக்கத்தை விட்டு விடாமல் கைக் கொண்டிருந்தார். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கவிராயர் குடும்பம் என்றால் அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். முத்துமாரிக் கவிராயர் காலத்தில்தான் முதல் முதலாக வறுமையின் பிடியில் அவர் குடும்பம் சிக்கியது. ஜமீன்தார்களையும், குறுநில மன்னர்களையும் அணுகி வாழ்ந்த அவருடைய முன்னோர் வாழ்க்கைத் தேவைகளுக்காக ஏங்கி வறுமையுற்றதாகச் சொப்பனத்தில் கூடக் கண்டது இல்லை. செல்வக் கொழிப்புடன் வாழ்ந்தார்கள். புலமைச் செருக்கோடு பாடித் திரிந்து புகழ் பரப்பினார்கள். அவர்கள் காலம் இன்றைக்குக் கனவாகி விட்டது: குடும்பக் கெளரவத்தை எடுத்துச் சொல்லி நான்கு பேர் சிபாரிசு செய்ததன் பேரில் ஐம்பத்தைந்தாவது வயது வரை ஜில்லா போர்டு பள்ளிக்கூடமொன்று முப்பது ரூபாய் சம்பளத்தில் அவருடைய தமிழ்ப் பணியை ஏற்றுக் கொண்டிருந்தது. அதிலிருந்து ரிட்டையராகி மூன்றரை வருடங்கள் ஆகி விட்டன. பரம்பரைப் புலமையும் நல்ல கவி சாதுர்யமும் உள்ள அவரை அதன் பிறகு எவரும் நாடுவாரில்லை. மூன்று குழி மான்னிய நிலம் இருந்தது. இந்த வருவாயைக் கொண்டு காலம் தள்ளி வந்தார்.அங்கும் இங்குமாக எப்போதாவது சிலர் பாட அழைப்பார்கள். அதில் ஏதாவது சன்மானம் கிடைக்கும். மற்ற நாட்களில் அவர் உண்டு, அவருடைய ஏடுகளும் எழுத்தாணியும் உண்டு என்று இருப்பார். அரை நொடியையும் வீணாகக் கழிக்க மாட்டார். புதிது புதிதாகப் பிரபந்தங்களை இயற்றுவார். தாமே படித்து மகிழ்வார். எப்போதாவது உணர்வு கட்டுக்கடங்காத போது தம் மனைவிக்கும் படித்துக் காட்டுவார். அந்த அம்மாளுக்கு ரசிக்கத் தெரியுமோ, தெரியாதோ மண்டையை ஆட்டிக்