பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கொண்டிருப்பாள் .குழந்தை குட்டிகள் இல்லாத மலட்டு ஜன்மமாக வாழ்வைக் கழித்து விட்டோமே என்பது அவர் மனைவிக்கு நீங்காத மனக்குறையாக இருந்தது. கவிராயர் இதைப்பற்றி கவலைப்படுவதே கிடையாது. சில சமயங்களில், ‘இன்றைய நாகரிக உலகில் ஆதரிப்பாரற்றுப் போய் விட்டபோது வீணாக இந்தக் குறிஞ்சிப் பாடித் கவிராயர் பரம்பரை தழைத்துத் தான் என்ன செய்யப்போகிறது?’ என்று கூட அவருக்குத் தோன்றும் மான அவமானங்களுக்கு ஆளாகி, அல்லாடாமல் நம்முடைய காலம் பரம்பரைக் கெளரவத்திற்கு இழுக்கின்றி ஒருவாறு ஓடிவிட்டது. இனியும் இந்தப் பரம்பரை வளர்ந்து தான் என்ன செய்யப்போகிறது? ஒரு வேளை முடித் துணிக்கும் நாழி யரிசிக்கும் பிச்சை யெடுக்கும் பரம்பரையாக ஆனாலும் ஆகலாம்!. நல்லவேளை! இந்தப் பரம்பரை இதோடு ஒழிந்து போகட்டும் என்று தம்மை மீறிய துக்கத்தோடு சிலபோது மனதிற்குள் அலுத்துக் கொள்வார். தனி மனிதன், தகுதி, திறமை, பரம்பரை, இவைகளைக் கொண்டு வாழக்கூடியதாக எதிர்காலம் இருக்காது என்பது அவருக்குத் தெரிந்தது. ஏன்? அவர் காலத்தில் அவரே அந்த அனுபவத்தை அடைந்து விட்டாரே? எதிர்காலம் அதற்கு அப்பனாகத்தானே இருக்க வேண்டும்?

வாசலில் பன்னீர்மரம், ஆடி மாதத்துக் காற்றில் சாய்ந்து விடும்போல் ஆடிக்கொண்டிருந்தது.மணி இரவு இரண்டரை ஆகியிருக்கும்.முத்துமாரிக் கவிராயர் படுத்தவர் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார். பாழும் இருமல் அவரை ‘உலுக்கு உலுக்'கென்று உலுக்கியது. படுத்துக் கொண்டே இருமுவது அவருக்குப் பெரிய வேதனையாக இருந்தது. எழுந்து உட்கார்ந்து கொண்டார். உள்ளே கூடத்தில் அவர் மனைவி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். இந்த உயிர் வாதனைக்கு ஏதாவது வைத்தியம் செய்துகொள்ளலாம் என்றால் காலத்தை ஒட்டுவதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும் போது வைத்தியம் செய்து கொள்ள அவரிடம் ஏது பணம்.? இப்போது அவருக்குச் சோமசுந்தரத்தின் நினைவு வந்தது. காலையில் அவன் தம்மைச் சந்தித்துப் பேசியபோது கூறியதெல்லாம் நினைவிற்கு வந்தன. 'அவன் சொன்னபடி நடந்தால் ஒரு வேளை இந்த நோய்க்கு ஏதாவது மருந்து சாப்பிடலாம்' என்று ஆசைப்பட்டது அவர் மனம்.சோமசுந்தரம் குறிஞ்சிப்பாடிக் கிராமக்கணக்கர் மகன். பட்டணத்தில் ஏதோ நல்ல வேலையில் இருந்தான். கவிராயரிடம் அவனுக்குப் பயபக்தி உண்டு. ஊருக்கு வந்தால் அவரைப் பார்த்து அளவளாவாமல் போகமாட்டான். கவிராயருக்கும் அந்தப் பையன்மேல் அலாதியான பற்று உண்டு. ஊருக்கு அப்போது வந்திருந்த அவன், அன்று காலை அவரைப் பார்க்க வந்திருந்தபொழுது ஒர் நல்ல செய்தியை அவருக்குச் சொன்னான். சென்னையில் பழைய ஏட்டுப் பிரதிகளைச் சேகரித்து வெளியிடும் ஸ்தாபனம் ஒன்றிருப்பதாகவும் கவிராயர், ஏற்கெனவே இயற்றி வைத்திருக்கும் சுவடிகளும் கைவசமுள்ள வேறு சுவடிகளும் அந்த ஸ்தாபனத்தில் நன்றாக விலை போகும் என்றும் சோமசுந்தரம் கூறியிருந்தான். கவிராயருக்கு ஆசை தட்டியது. ஒரு புறம் தாங்க முடியாத மனத் துயரமும் கலந்திருந்தது. அந்த ஆசையில், “கருத்தையும் கற்பனையையும் உருக்கிப் படைத்திருந்த விலையில்லாத கவிதை மாணிக்கங்களைப் பத்திர அடமானம் போல விலைக்கு விற்பதா? குடும்பப் பெருமைக்கே மாசு அல்லவா அது? ஆனால். ஊர் பேர்