பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி ! தகுதியும் தனி மனிதனும் * 343

எழுதாமல் ஏடுகளில் வெறும் பிரபந்தங்களைத்தானே எழுதியிருக்கிறோம். அதனால் மரபுக்குக் கேவலம் ஏற்படாது. மனதிற்குத்தான் இது பெரிய வஞ்சகம் “சிராப்பள்ளிக் குறவஞ்சியும்","தெய்வநாயகியம்மை பிள்ளைத் தமிழும் போலக் கல்பகோடி காலம் தவமிருந்தாலும் எனக்குப் பின் எவனும் எழுத முடியுமா? ஆகா? எவ்வளவு அற்புதமான சந்தங்கள். பாடி முடித்ததும் “எனக்கா இவ்வளவு கவித்திறன்.” என்று என்மேலேயே நான் சந்தேகப்படும்படி இருந்தனவே அவைகள்? என் வாயால் நானே அவைகளைப் பாடிப் பலர் புகழ அரங்கேற்றம் செய்து பெருமை அடையாமல் பேவதற்குச் சென்ற பிறவியில் என்ன பெரும் பாவம் செய்தேனோ? "ஏடும் எழுத்தாணியும் எவருக்குமே இல்லாத திறமையுமிருந்தால் மட்டும்போதாது போலும்! அந்தத் தகுதிகளைப் பெற்ற தனி மனிதனைக் கைதூக்கி மேலே கொண்டு வந்து காலத்துக்கும் அது தொடர்ந்து வர வாழும் சமூகத்திற்கும் அறிமுகம் செய்ய ஒரு பாக்கியமும் வேண்டுமே?.” அந்தப் பாக்கியம் நமக்குக் கொடுத்து வைக்கவில்லை போலும். எழுத்தைப் பெயர் சொல்லாமல் “யாரோ முன்னர் எழுதியது போல நினைக்குமாறு விலைபேசி வாழவேண்டியிருக்கின்ற அந்தப்பாக்கியம் நம் தலையில் எழுதியிருக்கிறதானால் அது தானே நமக்குக் கிடைக்கும்?. ம்ம்ம்..” பலவிதமாக எண்ணி மனங்குமைந்து கொண்டிருந்தது அந்தக் கிழ ஜீவன். தூரத்தில் அவரைப் போலவே உறக்கம் வராததனாலோ என்னவோ, ஏதோ ஒரு சாமக்கோழி இரண்டு மூன்று முறை கூவிக் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றும் பன்னீர்ப் பூக்களின் கமகம வென்ற மணமும் பொழுது விடிய இன்னும் நான்கைந்து நாழிகைகளுக்கு மேல் இல்லை என்பதை அறிவுறுத்தின. இப்போதுதான் அவருக்குச் சற்று உறக்கம் வருவது போலிருந்தது.

மறு நாள் பொழுது விடிந்தது. கவிராயர் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்திற்கு எழுந்திருக்கவில்லை. விடிந்து வெகு நேரமானபின் எழுந்ததனால் குளித்து உண்ண நாழிகையாயிற்று. வெற்றிலைச் செல்லத்துடன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு திண்ணைக்கு வந்த அவரை அங்கே அமர்ந்துகொண்டிருந்த சோமசுந்தரம் புன்முறுவலுடன் எழுந்து வணங்கி வரவேற்றான்."அடேடே சோமுவா? வா! வா! நீ எப்பொழுது வந்தாய்?நான் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வந்தவன் உள்ளே வரக்கூடாது?..” என்று கூறிக்கொண்டே திண்ணையில் உட்கார்ந்தார் கவிராயர். சோமுவும் உட்கார்ந்து கொண்டான்.

"ஐயா! இன்று மாலை ஊருக்குப் புறப்படலாம் என்று இருக்கிறேன்” என்று அவரிடம் தான் வழக்கமாகப் பேசும் தமிழில் சோமு கூறினான்.

"அப்படியா? அப்புறம். இந்த ஏடுகளைப் பற்றி என்னவோ சொன்னாயே!?. இப்போ எதாவது செளகரியப்படுமா?"

"ஆமாம்! நானே கேட்கவேண்டுமென்று இருந்தேன் ஐயா! ஏதோ இருப்பதைக் கொடுங்கள். நான் அங்கே முயற்சி செய்து விரைவில் அச்சாகச் செய்கிறேன். நல்ல தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்யலாம் ஐயா! சோமு பேசி நிறுத்தினான்.