பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

முத்துமாரிக் கவிராயர் துணிந்துவிட்டார். உள்ளே எழுந்து சென்ற அவர் காழ்நாழிகைக்குப் பின் தெரிந்தெடுத்த சில சுவடிகளடங்கிய ஒரு சிறு மூட்டையுடன் வெளிப்பட்டார். சோமு அதைப் பெற்றுக்கொண்டான்.

"சோமு!” கவிராயரின் இந்தக் குரலில் அளவு கடந்த உருக்கம் தோய்ந்து வெளிப்பட்டது. "உப்பு புளி வியாபாரம் போல இந்த அமர காவியங்களைத் காசுக்காகக் கொடுக்க விரும்புகிறேன். இது 'என் பூர்வ ஜன்ம பாவம்!. ஏதோ இந்தக் குத்திருமல்நோக்காடு தீர ஏதாவது வைத்தியம் செய்து கொள்ளவேண்டும். அதற்காக இவைகளைப் பணயம் வைக்கிறேன் - அவ்வளவுதான் இதற்கு மேல் நான் உன்னிடம் சொல்ல என்ன இருக்கிறது?” கண் விளிம்பில் நீர் திரள இவ்வாறு கூறினார் முத்துமாரிக் கவிராயர், சோமுவுக்கு அவர் வார்த்தைகள் என்னவோ செய்தன. அமைதியாக, 'ஆகட்டும் ஐயா! வேண்டியதை எவ்வளவு துரிதமாக முடியுமோ அவ்வளவு துரிதமாகச் செய்கிறேன். வருகிறேன் ஐயா! வணக்கம்’ என்று கூறி விடைபெற்றுக்கொண்டான். அவன் போன பின்பு உள்ளே திரும்பிய முத்துமாரிக் கவிராயருக்கு ஏதோ இழக்க முடியாத ஏன் இழக்கத்தகாத பொருள் கை நழுவிப் போவது போன்ற ஒருணர்ச்சி ஏற்பட்டது; ஆண்டாண்டுகளாக அகல் விளக்கு வெளிச்சத்தில் குளிரென்றும் பணியென்றும் பாராமல் கை ஒடிய அவர் எழுதிய கவிதா சிருஷ்டிகள் எங்கோ முன் பின் அறியாத இடத்திற்கு, விலைச் சரக்கைப் போலப் போகின்றன. பொள்ளுக்கொள்ளென்று இருமியவாறே கைவலிக்க அவர் பட்ட கஷ்டங்களை வீட்டு வாயில் திண்ணையும் எதிரே இருக்கும் பன்னீர்மரமும் வாயிருந்தால் சொல்லும், திண்ணையும் மரமும் அவை போன்ற இன்னும் எண்ணற்ற எத்தனையோ ஜடப்பொருள்களும் மற்றவர் துன்பங் கண்டு ஆறுதல் கூறும் சக்தியைப் பெற்றிருந்தால் பலர் தேறியிருப்பாரோ என்னவோ? ஆனால் தேறுதலும் ஆறுதலும் கூறிப் பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்யும் அந்த ஆற்றல் அதைச் செய்ய விரும்பாத அல்லது செய்ய முடியாத மனித சமூகத்தினிடம் அல்லவா இருக்கிறது? அப்படி இருக்கும்போது கவிராயரைப் போன்ற தகுதி பெற்ற தனிமனிதர்கள் எங்கே ஆறுதல் பெற்றுவிடமுடியும்?. ஆறுதலே, வெறும் கானல்நீர்தான் அவரைப் பொறுத்தவரையில்,

ஒன்றரை வருடம் கழிந்தது. சென்னையிலிருந்து ஏதாவது தகவல் தெரியும் என்று காத்திருந்து காத்திருந்து அலுத்து விட்டது கவிராயருக்கு. சுவடிகளை ஸ்தாபனத்தில் கொடுத்து அவருடைய விலாசத்தையும் சொல்லியிருப்பதாகப் போன ஆறு மாதம் கழித்துச் சோமசுந்தரம் கடிதம் போட்டிருந்தான். அவ்வப்போது ஸ்தாபனத் தலைவரைச் சந்தித்துத் துரிதப்படுத்துவதாகவும் கடிதம் எழுதி வந்தான். இங்கே நாளுக்கு நாள் துரும்பாக இளைத்து வந்தார் முத்துமாரிக் கவிராயர். இருமல் நோய் அவரைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. அவர் படும் அவஸ்தையைக் காணக் சகிக்காமலோ என்னவோ சுமங்கலியாகவே போய்ச் சேர்ந்தாள் அவருடைய மனைவி, ஒண்டிக் கட்டையாகக் குறிஞ்சிப்பாடியில் இருக்கவே பிடிக்கவில்லை அவருக்கு அந்த நிலையில்தான் அன்று அவருக்கு ஒரு கடிதமும் புத்தகமும் தபாலில்