பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

'தகுதியோடு கூடிய தனிமனிதன் உயிரைக் கொடுத்துத்தான் தன் சிருஷ்டிகளுக்குப் பெருமை தேடிக் கொடுக்கவேண்டும் என்ற உண்மை அவருக்கு இப்போது நன்றாகப் புரிந்துவிட்டது. கலையும் திறமையும் கற்பனையும் அபாரமாக இருக்கும் தனிப்பட்ட நிகழ்காலக் கலைஞர்களைக் காட்டிலும் மண்ணோடு மண்ணாக மறைந்துபோன இறந்த காலக் கலைஞர்கள் எது செய்து வைத்திருந்தாலும் அதுதான் சமூகத்தின் பாராட்டிற்குரிய அந்தஸ்தைப் பெறத் தகுதி வாய்ந்தது போலும்.

இந்த நூலாராய்ச்சியை எழுதியுள்ள கேசவேசுவரனாரும் என்னைப் போல ஒரு தனிமனிதன்தான். தகுதி எப்படியோ? அறியமாட்டேன். பட்டமும் பதவியும் சூழ்நிலையும் தகுதியை உண்டாக்கியிருக்கின்றன. அவர் எது பேசினாலும் என்ன எழுதினாலும் இந்தச்சமூகத்திற்கு அமுதம்போல இருக்குமெனத்தெரிகிறது. தகுதியை மிகுதி செய்யும் சூழ்நிலையும் பிறவும் இல்லாதபோது என் போன்ற தனி மனிதனிடம் அது பிரகாசிக்க முடியாது? இது தெரிந்து ஆசை கேட்டுத் தொலைக்கிறதா என்ன? கொள்ளுக் கொள்ளென்று இருமியவாறே திண்ணைக்கு வருகிறார். அந்தப் பழம்பாயும் தலைக்கட்டையுமே தகுதியைக் கேட்காது அவரை ஆதரிக்கும் பொருள்கள். தலையை முழங்கையால் முட்டுக்கொடுத்துக் கொண்டே படுத்தார். குத்திக் குத்தி வெளிவந்த இருமல் அவரைப் படுக்கவிடவில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டே இருமினார். காலையில் அலர்ந்த பன்னீர் மலர்களெல்லாம் தரையில் உதிர்ந்தன. அரை நாழிகையாக மூச்சைப் பிடித்துக் கொண்டு இருமினார். இடைவிடாமல் இருமினார். அதற்குப் பிறகு இருமல் ஒலி அங்கிருந்து எழவில்லை. பொட்டென்று அவர் தலை கீழே சாய்ந்துதலைகட்டையில் மோதியது. முத்து மாரிக் கவிராயர் தகுதியை உணரமுடியாத உலகிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார். சாயங்காலம் யாரோ கவிராயர் வீட்டுப் பக்கம் தற்செயலாக வந்தவன் ஊருக்கு அறிவித்து நாலு பேரைக் கூட்டினான். உற்றார் உறவினரற்றவர்களுக்கு ஊரார் கூடி இடுகின்ற கோவிந்தாக் கொள்ளிதான் அவருக்கும் கிடைத்தது. நெஞ்சு வேகுமா? புண்பட்ட அந்த நெஞ்சு வேகும்படி செய்தது அள்ளி வைத்த நெருப்பு. அதற்குத் தகுதி வேண்டியதில்லையே.

“என்ன துரதிஷ்டம் பாருங்கள் உயிரோடிருக்கும்போது நாலு சருகு வெற்றிலைக்குத் திண்டாடினார் இந்த முத்து மாரிக்கவிராயர். நேற்று அவர் பிணமும் சுடுகாட்டில் வெந்து போயிற்று இன்று எவனோ சென்னையிலிருந்து அவருக்கு ஐநூறு ரூபாய்க்குச் செக் அனுப்பியிருக்கிறான்! ஏதோ ஏட்டுச் சுவடிகள் அனுப்பி வைத்திருந்தார் போலிருக்கிறது.” குறிஞ்சிப்பாடி போஸ்ட்மாஸ்டர் யாரிடமோ விசனப்பட்டுக்கொண்டே ரிஜிஸ்டர் கவரின் மேலிருந்த முத்துமாரிக் கவிராயரின் விலாசத்தைச் சிவப்பு மையினால் அடித்து ஆங்கிலத்தில் சில குறிப்புகள் எழுதி சுவடி சேகரிப்பு ஸ்தாபனத்துக்கே திருப்பி அனுப்பினார். வாழ்ந்தபோதும் அவருடைய தகுதி சிவப்பு மை அடி போலத்தான் அந்தக் கிராமத்து இருட்டடிப்பில் அமுங்கிக் கிடந்தது. இன்றும் அதே கதிதானே?

.

(1960-க்கு முன்)