பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44. தனி ஒருவனுக்கு

ண்பர் பரபரப்பாக ஓடி வந்தார். ‘கேட்டீர்களா செய்தியை? அந்தப் பயல் முத்துக்காளைக்காக அன்று அவ்வளவு பரிந்து கொண்டு வந்தீர்களே? கடைசியில் அவன் பண்ணையார் வீட்டு வைக்கோல் படைப்பில் நெருப்பை வைத்து விட்டு ஒடியிருக்கிறான்.’

திருவடியா பிள்ளை வியர்க்க விறுவிறுக்க இந்தச் செய்தியை ஒடி வந்து சொன்ன போது, இரவு எட்டரை மணி. அப்போதுதான் இராச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, வாசல் குறட்டில் வந்து உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலைப் பெட்டியை இன்னும் திறக்கக் கூடஇல்லை. அதற்குள் அவர் கொண்டு வந்த செய்தி, ஆளைத் தூக்கி வாரிப் போட்டது. திடுக்கிட்டேன்; அதிர்ச்சியடைந்தேன்.

‘யார்? நம்முடைய முத்துக்காளையா? எப்போது செய்தான்?’ நம்ப முடியாமல் சந்தேகத்தோடு, மறுபடியும் அவரைத் தூண்டிக் கேட்டேன்.

“உம்முடைய முத்துக்காளையேதான். பொழுது மயங்கி இருட்டியதோ இல்லையோ, சொக்கப்பனை கொளுத்துகிற மாதிரிக் கொளுத்திவிட்டுப் போய் விட்டான். இதோ பாரும் கிழக்கே நாற்பது வண்டி வைக்கோல் எரிகிற அநியாயத்தை.”

நான் குறட்டிலிருந்து இறங்கித் தெருவில் நின்று கொண்டு, கிழக்கே திரும்பிப் பார்த்தேன். கிருஷ்ண பட்சத்து அமாவாசை இருளில் கிழக்கே பண்ணையார் வீட்டுக் கொல்லையில் செக்கச் செவேலென்று சோதிப் பெரு வெள்ளமாய் வானம் வெளி வாங்கியிருந்தது. படைப்பு எரிவது நன்றாகத் தெரிந்தது. தீ நாக்குகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன.

‘இப்போது என்ன சொல்கிறீர்? உம்முடைய கருணைக்குப் பாத்திரமான அந்த மகானுபாவன் முத்துக்காளையின் கைங்கரியம்தான் இது!’ என்றார் திருவடியா பிள்ளையும், தெருவில் என்னருகே வந்து நின்று கொண்டு. எனக்குத் தர்ம சங்கடமாகி விட்டது. ஏழையாயிற்றே என்று இரக்கப்பட்டதற்குக் கை மேல் பலனா? நாளைக்குப் பண்ணையார் முகத்தில் எப்படி விழிக்கப் போறேன்? ஐயோ! இந்த வம்பில் நான் எதற்காக மாட்டிக் கொண்டேன்? முத்துக்காளையின் குடும்பம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? இந்தத் தெருவிலுள்ள ஐம்பது வீட்டுக்காரர்களும் பேசாமல் இருந்தார்களே; அதைப்போல் நானும் பேசாமல் இருந்து தொலைந்திருக்கக் கூடாதா? முரட்டுப் பயல் என் பெயரைக் கெடுத்து விட்டுப் போய்விட்டானே?