பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

திருவடியா பிள்ளை வந்து கூறிய செய்தியைக் கேட்டுத் தவியாய்த் தவித்தது என் உள்ளம். முத்துக்காளை அப்படிச் செய்திருப்பான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆம்! இன்னும் - அதாவது இந்த விநாடி வரை நம்ப முடியவில்லை.

‘என்ன ஐயா; மலைத்துப் போய்த் தெருவிலேயே நின்று விட்டீர்? பண்ணையாரிடம் போய் ஆறுதலாக நாலைந்து வார்த்தைகள் சொல்லிவிட்டு வரவேண்டாமா? சமாசாரத்தைக் கேள்விப்பட்ட பிறகும், நீர் போகாமல் இருப்பது நன்றாயில்லை.”

"ஆமாம் முத்துக்காளை எங்கோ ஒடிப் போய் விட்டானென்கிறீர்களே. அவன் தீ வைத்துவிட்டு ஓடினதைக் கண்ணால் நேரில் பார்த்தவர்கள் யாராவது உண்டா?'

'யானை பார்க்க வெள்ளெளுத்தா? அந்தப்பயலைத் தவிர வேறு யாராவது இதைச் செய்திருக்க முடியுமா?'

"ஆள் அகப்பட்டு விட்டானா?

'பயல் அகப்படாமல் எங்கே போகிறான்? தேடிக் கொண்டு போயிருக்கிறார்கள்.'

‘சரி; அது போகிறது. படைப்பு எரிவதைப் பார்த்தவுடன் தண்ணீரைத் தூக்கி அணைப்பதற்கு ஏதாவது முயற்சி செய்தார்களோ, இல்லையோ?”

‘முழுவதும் எரிந்து சாம்பலாகப் போனாலும் சரி, போலீசார் வந்து பார்க்கிறவரை படைப்பில் ஒரு பொட்டுத் தண்ணீர் சிந்தக் கூடாதென்று பண்ணையார் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். அதனால் யாரும் எதுவும் செய்யவில்லை. நன்றாக அடியிலிருந்து நுனிவரை பற்றி எரிகிற படைப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.”

'அட பாவி மனிதா அவ்வளவு வைக்கோலும் வீணாக எரிந்து சாம்பலானால், அதனால் யாருக்கு என்ன ஆயிற்று?'

'அதென்னமோ? சும்மா எரியட்டும்! இந்த நாற்பது வண்டி வைக்கோல் மீந்ததனால் நான் குபேரனாகிவிடப் போவதில்லை என்று பண்ணையார் ஜம்பமாகச் சொல்லிவிட்டார். யாருக்கென்ன வந்தது; அவரே அப்படிச் சொல்லும் போது? என்று வாளியும் கயிறுமாகத் தீயை அணைக்க வந்த அக்கம்பக்கத்து ஆட்களும் திரும்பி விட்டார்கள்.

'இதோ வந்து விட்டேன். வெற்றிலைப்பெட்டி திண்ணையில் கிடக்கிறது. உள்ளே எடுத்து வைத்துவிட்டுக் கதவைத் தாழிட்டுக் கொள்ளும்படி மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு வந்து விடுகிறேன். நாம் கேட்க வேண்டிய முறைக்கு, போய் கேட்டுவிட்டு வந்துவிடுவோம்’ என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றேன்.

‘சுருக்க வாருங்கள்! உங்கள் தலையைப் பார்த்தால், பண்ணையார் திட்டித் தீர்த்துவிடப் போகிறார்' என்றாள் அவள்.