பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350 நா.பார்த்தசாரதி சிறுகதைகள்

மூலமாகச் செய்துகொள்ள முடியும்' என்று பயமுறுத்தினாராம். முத்துக்காளை அரண்டு போய்விட்டான். ஒரு வாரமாகப் பணத்துக்கு அலைந்திருக்கிறான். வேறு எங்கேயாவது கைமாற்றாக வாங்கியாவது பண்ணையார் கடனை அடைத்துத் தப்பித்தால் போதுமென்று ஆகிவிட்டது அவனுக்கு, வயிற்றுக்குக் கஞ்சி வார்த்துக் கொண்டிருக்கும் கால் வேலி நிலத்தையும் கபளீகரம் செய்யப் பார்த்தால், யாருக்குத்தான் ஏற்படாது பயம்?

கடைசியில் என்னிடம் ஒடி வந்திருக்கிறான். நீங்கள் தான் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்று காலைப் பிடிக்காத வண்ணம் கெஞ்சினான்.

'முத்துக்காளை! என்னிடம் பணம் இல்லை. வேறு எங்கேயும் சொல்லி வாங்கித் தரவும் வழியில்லை. எனக்குத் தெரிந்தவர்கள், வேண்டியவர்கள் எல்லோரும் பண நிலைமையில் அநேகமாக என்னைப் போன்றவர்கள்தான். ஆனால் ஒரு உதவி உனக்கு நான் செய்ய முடியும். ஊர்ப் பஞ்சாயத்து ஆபீஸர் என்ற வகையில், நாலு பேரிடம் செல்வாக்கு இருக்கிறது. நாளைக் காலையில் நீ இங்கே வா. நானும் இன்னும் இரண்டு மூன்று முக்கியமான புள்ளிகளும் உன்னைப் பண்ணையாரிடம் அழைத்துக் கொண்டு போய்ச் சுமுகமாக ஒரு நல்ல முடிவு ஏற்பட வழி செய்கிறோம். உன் நிலம் பறிபோகாதபடி ஒரு மத்தியஸ்தம் பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லி அனுப்பினேன். அவன் நம்பிக்கையோடு போனான். பஞ்சாயத்து ஆபீஸ் மூலம் எத்தனையோ பெரிய காரியங்களுக்கெல்லாம் பண்ணையார் என் தயவை எதிர்பார்க்கிறார். ஆகவே முத்துக்காளை விஷயத்தில் என் வார்த்தையை அவர் தட்டமாட்டாரென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

உண்மையில் மறுநாள் நான் நினைத்தபடியே நடந்தது .முத்துக்காளையும், நண்பர் திருவடியாபிள்ளை போன்ற இரண்டொரு ஆட்களையும் கூட்டிக் கொண்டு போய்ப் பண்ணையாரிடம் மத்தியஸ்தம் பேசினேன். என்னைத் தவிர மற்ற யாரும் முத்துக்காளையைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

'சார்! இந்தப் பயல்கள் சொன்னால் சொன்னபடி நாணயமாக நடந்துகொள்ள மாட்டார்கள். முரட்டுத்தனமாக ஏதாவது பேசுவார்கள். அடாபிடிக் காரியங்களில் இறங்குவார்கள். இவர்களுக்காகப் பரிந்துகொண்டு வந்து, உங்கள் கெளரவத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று நெருங்கிய நண்பரான திருவடியா பிள்ளையே தடுத்துப் பார்த்தார்.

'இல்லை சார்! எங்கள் முத்துக்காளையை எனக்குத் தெரியாதா? அவன் தங்கமான மனிதன்' என்று சொல்லி அவரை மறுத்தேன் நான்.

கடைசியில் மாதத்திற்கு இவ்வளவென்று முத்துக்காளை தவணை தவணையாகப் பண்ணையாரின் கடனை அடைத்து விடுவதென்றும், பண்ணையார்வாள் நிலத்தைக் கைப்பற்றுவதில்லை என்றும் சமாதானமாக ஏற்பாடு செய்து விட்டு வந்தேன். நான், நண்பர் பிள்ளை, இன்னொரு உள்ளூர் பிரமுகர் ஆகிய மூன்று பேரும் பக்கத்திலிருந்து

தான் பண்ணையாரை இதற்கு இணங்கச் செய்தோம்.