பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தனி ஒருவனுக்கு 351

இந்த ஏற்பாட்டைச் செய்து உருப்படியாக நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படி நடந்துவிட்டதென்றால், நம்பக்கூடியதாகவா இருக்கிறது?' அடக்க ஒடுக்கமாக என் வீட்டில் வந்து கெஞ்சிய முத்துக்காளையா இப்படிப் பண்ணையார் வீட்டு வைக்கோல் படைப்பில் தீயை வைத்து விட்டான்' என்று நம்பமுடியாத மனத்தோடு நடந்து கொண்டிருந்தேன்.

"ஏன் சார்? இந்த முரடன் ஏதாவது அர்த்தத்தோடு செய்திருக்கிறானா பாருங்கள்? அவருடைய வைக்கோல் படைப்பு எரிந்துவிட்டால், இவன் தரவேண்டிய கடனைக் கேட்காமலிருந்து விடுவாரா?

'அதுதானே எனக்கும் சந்தேகமாக இருக்கிறது! எல்லாவற்றையும் சமாதானமாக முடித்து வைத்தபின் இவன் இப்படி எதற்காகச் செய்தான்?' - இருவரும் பேசிக் கொண்டே பண்ணையார் வீட்டை அடைந்தோம்.

அகலமும், நீளமும், உயரமுமாகக் கொல்லைப் பிரதேசம் முழுவதும் அடைத்துக் கொண்டிருந்த பிரம்மாண்டமான வைக்கோற் படைப்பு இன்னும் அணையாமல் எரிந்து கொண்டுதான் இருந்தது.

கொல்லைப் புளிய மரத்தைச் சுற்றிக் கூட்டமாக இருந்தது. போலீஸ் தலைகளும் தெரிந்தன. பண்ணையாரின் கூப்பாடும், சுளிர் சுளீரெனப் புளிய விளாரினால் அடிவிழும் ஒசையும் கேட்டன.

'முத்துக்காளை பிடிபட்டு விட்டான் போலிருக்கிறது' என்றார் நண்பர். இருவரும் பரபரப்போடு கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே சென்றோம்.

முத்துக்காளையைப் புளியமரத்தோடு சேர்த்துக் கட்டிப் போட்டிருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏதோ அதட்டிக் கேட்டுக் கொண்டே புளிய விளாரினால் அடித்துக் கொண்டிருந்தார். பண்ணையார் பக்கத்தில் நின்று கூப்பாடு போட்டு அவனை வைதுகொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் முத்துக்காளை ஓவென்று அலறினான்.'சின்ன ஐயா! இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா? வீட்டிலே உறங்கிக் கிட்டிருந்தவனை எழுப்பிக் கொண்டு வந்து நீதான் வைக்கோல் படைப்புக்குத் தீ வைத்தாய்’ என்று சொல்லிக் கட்டி வைத்து அடிக்கிறாங்களே!’

டேய்! சும்மா இருக்கிறாயா? உதை கேட்கிறதா? இன்ஸ்பெக்டர் அதட்டிக்கொண்டேபுளிய விளாரை ஓங்கவே, என்னைக் கண்டதும் பெருகிப்பாய்ந்த தன் உணர்ச்சியை அவன் அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. -

'பாரும் ஐயா இந்த அக்கிரமத்தை' அன்றைக்கு உம்முடைய வார்த்தைக்காகத்தான் இந்தப் பயல்மேல் அனுதாபம் காட்டினேன். கடனைத் தவணைதவணையாக வாங்கிக் கொள்ளச் சம்மதித்தேன். இன்றைக்கு இவன் என் வீட்டுப் படைப்பிலேயே தீ வைத்து விட்டான். வண்டி பத்து ரூபாய் வீதம் விற்றிருந்தாலும் நானூறு ரூபாய்க்குப் போயிருக்கும்’ என்று என்னிடம் வேதனையோடு குறைப்பட்டுக்கொண்டார்