பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பண்ணையார் எனக்கு அவருடைய வார்த்தைகள் என்னைக் குத்திக் காட்டுவதற்காகச் சொல்லப்பட்டவைபோல் தோன்றின.

முகத்திலும் கண்களிலும் சினமும் ஆத்திரமும் பொங்க, மரத்தில் கட்டிப் போட்டிருந்த முத்துக்காளையை ஏறிட்டுப் பார்த்தேன்.

‘ஏண்டா எவ்வளவு நாளா என் பெயரைக் கெடுக்க வேண்டுமென்று இப்படிக் காத்துக் கொண்டிருந்தாய்?'

"ஐயோ! சாமீ! நீங்களுமா இதை நான் செய்திருப்பேன்னு நம்புறீங்க? சத்தியமா, தெய்வ சாட்சியா, இதை நான் செய்யலீங்க. வீட்டிலே கிடந்தவனை இழுத்துக்கொண்டு வந்து 'நீதான்' என்று கட்டிப் போட்டு அடிக்கிறாக, அந்த ஆகாசவாணி, பூமிதேவிக்குக் கண் இருந்தால், அவள் கேக்கணும்' என்று அலறினான் அவன்.

'செய்றதையும் செய்துவிட்டு ஏண்டா இந்த அரிச்சந்திர வேஷம் போடுகிறாய்” என்றார் பண்ணையார்.

"ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் உதைக்கிற விதமாக உதைத்தால் 'நான்தான் தீ வைத்தேன்’ என்று உண்மையைக் கக்கிவிடுவான் சார்!’ என்றார் இன்ஸ்பெக்டர்.

எனக்கு அந்த இடத்தில் அதற்குமேல் நிற்பதற்கே வேதனையாக இருந்தது. 'பண்ணையார்வாள்! என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாத்தனமாய் இவனுக்காக உங்களிடம் பரிந்துகொண்டு வந்து விட்டேன்.இவன் இவ்வளவு அக்கிரமமாக நடந்து கொள்வானென்று நான் எதிர்பார்க்கவில்லை என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு திரும்பிவிட்டேன். திருவடியா பிள்ளை அங்கிருந்தே விடை பெற்றுக் கொண்டு, அவருடைய வீட்டுக்குப் போய்விட்டார். "சே! இன்றைய சமூகச் சூழ்நிலையில் எவனும் இளகிய மனதுள்ளவனாக இருக்கக் கூடாது. அனுதாபத்துக்குக் கிடைக்கிற பலன் ஆபத்துத்தான். முத்துக்காளைக்குக் கருணை காட்டப் போக ஊரில் கெளரவமான பெரிய மனிதர் ஒருவரிடம் எனக்கிருந்த மதிப்பைக் கெடுத்துக் கொண்டேன். 'எவன் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? என்று பேசாமல் இருந்திருந்தால், இந்த வம்பெல்லாம் வந்திருக்குமா?' பண்ணையார் வீட்டுக் கொல்லையிலிருந்து இருளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது என் மனத்தில் இத்தகைய விரக்தியான எண்ணங்கள் குழம்பின.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் திருவடியா பிள்ளை மறுபடியும் என்னைத் தேடிக்கொண்டு வந்தார்.

'போலீஸ் ஸ்டேஷனில் அடியும் உதையும் பொறுக்க முடியாமல் முத்துக்காளைப் பயல் உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டானாம், 'நான் தான் தீ வைத்தேன் என்று'.

'தொலைகிறான். விட்டுத் தள்ளுங்கள் அந்தக் காலிப் பயல் பேச்சை' என்று வெறுப்பாகக் கூறினேன் நான்.