பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தனி ஒருவனுக்கு 353

'அத்தோடு இன்னொரு செய்தி தெரியுமா உங்களுக்கு? பழைய கடன் பாக்கி அறுநூறு ரூபாக்கும், வைக்கோல் படைப்பு எரிந்ததற்காக நஷ்ட ஈடாக நாநூறு ரூபாக்குமாகப் பண்ணையார் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்துவிட்டாராம்:

'ஊம். அப்புறம்?'

அப்புறமென்ன? வழக்கு வெற்றியாவதில் தடையில்லை. கோர்ட்டில் 'டிகிரி' வாங்கினதும், அந்தக் கால் வேலி நிலத்தைச் சுவாதீனம் செய்து சுவீகரித்துக் கொள்வார்.’

‘அதைத்தானே அவர் செய்ய முடியும்?'

'பின்னென்ன? பணத்தைக் கடன் கொடுத்தவன் தலையில் முட்டாக்குப் போட்டுக்கொண்டு சும்மா போவானா? கொடுத்த கடனுக்கு எதையாவது வாங்கித்தானே ஆகவேண்டும்?'

'ஆமாம் ஆமாம்! நன்றாகச் செய்து கொள்ளட்டும். நமக்கென்ன வந்தது? என்று அசுவாரஸ்யமாகப் பதில் சொன்னேன் நான். நண்பர் கேட்டுக்கொண்டு போய்ச் சேர்ந்தார். இது நடந்த சில நாட்களுக்குப் பின்பு முத்துக்காளை ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்று ஜெயிலுக்குப் போனதாகவும், அவன் தரவேண்டிய கடன் பணத்துக்காகப் பண்ணையார் கோர்ட்டில்'டிகிரி' வாங்கி, அவனுடைய கால் வேலி நிலத்தைச் சுவீகரித்துக் கொண்டதாகவும் அறிந்து கொண்டேன்.

என் மனதில் அப்போது சிறிதும் அனுதாபமோ இரக்கமோ ஏற்படவில்லை. 'அயோக்கியப்பயல் ஒழுங்காக இருந்து தவணை தவறாமல் பண்ணையாருக்குக் கடன் பணத்தைக் கட்டியிருந்தானென்றால் இப்படிச் சீரழிய நேர்ந்திருக்குமா?’ என்றுதான் நினைத்தேன்.

பண்ணையாரின் வைக்கோல் படைப்பு எரிந்த அமாவாசைக்கு அடுத்த அமாவாசையன்று, முன்னிரவு நேரத்தில் ஆபீஸ் காரியமாகப் பக்கத்துக் கிராமம் ஒன்றிற்குப் போய்விட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தேன்.பொழுதோடு ஊர் திரும்ப முடியாததால், அமாவாசை இருட்டில் கையில் டார்ச் லைட்கூட இல்லாமல் மேடும் பள்ளமுமான வாய்க்கால் வரப்புப் பாதைகளில் குறுக்கு வழியாகத் தட்டுத் தடுமாறி நடந்து வரவேண்டியிருந்தது.

மணி ஏழு, ஏழே காலுக்கு மேலிருக்காது என்றாலும், வானம் மழைக்கோப்பாக மப்பு மந்தாரத்தோடு இருந்ததாலும், அமாவாசையினாலும், இருள் அப்போதே கனத்திருந்தது.

எப்படியோ, ஊரை நெருங்கிவிட்டேன். பண்ணையார் வாழைத் தோட்டத்திற்குள் செல்லும் வரப்பின்மேல் சென்று கொண்டிருந்தேன்.அதைக் கடந்து கிழக்கே கால் பர்லாங் தூரம் நடந்தால் ஊர்தான். வாழைத் தோட்டத்துக் கிணற்றடியில் பண்ணையார் எவருடனோ பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்டது. வரப்புப் பாதையை ஒட்டினாற்போலக் கிணறு. இருட்டினாலும் வாழை மர

நா.பா. 1 - 23