பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அடர்த்தியினாலும் பாதையில் நடக்கிற ஆளைக் கிணற்றடியிலிருந்து கண்டு கொள்ள முடியாது. அதேபோல் கிணற்றடியில் நிற்கிறவர்களையும் பாதையிலிருந்து பார்த்துவிட முடியாது. ஆனால் பேச்சுக் குரலைக் கேட்க முடியும்.

நான் தயங்கி நின்றேன். பண்ணையார் பேசிக்கொண்டிருந்தது வேறு யாரோடும் அல்ல. அவருடைய சொந்த மைத்துனர் பரமசிவத்தோடுதான் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

‘என்னப்பா பரமசிவம்! மாடு கன்றுகளுக்குத் தீவனம் இல்லாமல் சங்கடமாக இருக்கிறது. எங்கேயாவது ஒரு பத்து வண்டி வைக்கோல் விலைக்கு வந்தால் பாரேன் - இது பண்ணையாரின் குரல்.

"அத்தான்! நீங்கள் அன்றைக்கே அந்தப் படைப்பைப் பாதியில் அனைத்திருந்தால் எரிந்தது போகப் பத்துப் பன்னிரண்டு வண்டி வைக்கோலாவது மீந்திருக்கும். நான் எவ்வளவோ சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை.' இது அவர் மைத்துனரின் குரல்.

'அடே, பரமசிவம்! இன்றைக்குத் தெரிந்துகொள், அந்த இரகசியத்தை அன்றைக்குப் படைப்பு எரிந்ததே, அது ஒரு நாடகம். உண்மையில் படைப்புக்குத் தீ வைத்தது யார் தெரியுமா?'

'யார்?'

'நானேதான்!”

‘என்ன அத்தான், விளையாடுகிறீர்களா?'

'விளையாடவில்லை நிஜமாகத்தான் சொல்கிறேன். இன்றைக்குத் தான் இந்த மர்மத்தை என் நெஞ்சிலிருந்து இரண்டாவது மனுஷனுக்குத் திறந்து சொல்கிறேன்!”

‘அத்தான்! 'பகலில் பக்கம் பார்த்துப் பேசு. இரவிலே அதுவும் பேசாதே' என்பார்கள். கொஞ்சம் மெல்லவே பேசுங்க”

இருவருடைய பேச்சுக் குரலும் தணிந்தது. ஆனாலும் பாதையில் வரப்பின் மேல் நின்றுகொண்டிருந்த எனக்குத் தெளிவாகக் கேட்டது.

'இந்தப் பஞ்சாயத்துப் போர்டு ஆபீஸர் இருக்கிறானே, இவனுக்காகத் தவணை வாரியாகக் கடனை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி வைத்தேன். இல்லையானால் எப்படியும் அந்தக் கால் வேலி நிலம் நம் கைக்கு வந்திருக்க வேண்டியது. கடைசியில் ‘என்னடா வழி' என்று பார்த்தேன். இந்த வேலையைச் செய்தேன். நாற்பது வண்டி வைக்கோல் போனதனால் எனக்கு ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. தலைக்கால் பாசனத்தில் அயனான நிலம் கால் வேலி கைக்கு வந்துவிட்டது.”

'அப்படியானால் அந்தப் பயல் எப்படிப் போலீஸில் தானே தீ வைத்தாக ஒப்புக் கொண்டான்?'

'அவனாகவா ஒப்புக் கொண்டான்? கொடுத்த அடியும், உதையும், நகக் கண்களில் ஏறிய ஊசியும், சேர்ந்தல்லவா அவனை அப்படி ஒப்புக் கொள்ள வைத்தன!'.