பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தனி ஒருவனுக்கு * 355

அத்தான்! என்ன இருந்தாலும் நீங்கள் எமகாதகப் பேர்வழிதான்! -மைத்துனரின் பாராட்டுக் குரல் மெதுவாக ஒலித்தது.

கேட்டுக்கொண்டு நின்ற என் நெஞ்சம் குமுறிக் கொதித்தது. எனக்குத் தெரிந்துவிட்டது. உண்மை தெரிந்துவிட்டது! ஆனால், நான் என்ன செய்ய் முடியும்? "சட்டமும், நியாயமும், நீதியும், போலீஸும், தனி மனிதனுக்குப் பயன்படாதவரை இந்தச் சமூகம் இப்படித்தான் குட்டிச் சுவராகப் போய்க் கொண்டிருக்கப் போகிறது’ என்று நினைத்துக் கொண்டே, அதற்கு மேலும் அங்கு நிற்கத் திராணியின்றி ஊரை நோக்கி வேகமாக நடந்தேன். என்னைச் சுற்றிலும் நிறைந்திருந்த கனமான இருளைப் போலவே, அந்த உண்மையையும் ஒரு இருளாகத்தான் எண்ண வேண்டியிருந்தது. யாரிடம் சொல்ல முடியும்? சொன்னால் யார்தான் நம்புவார்கள்?

ஆறு மாதத்துக்குப் பின்பு ஒரு நாள் இரவு பதினொன்றரை மணிக்குமேல் இருக்கும். இன்ஸ்பெக்ஷனுக்காகக் கணக்குகளையும், லெட்ஜர்களையும், அரிக்கேன் லாந்தரின் மங்கிய ஒளியில் புரட்டிச் சரிபார்த்துக் கொண்டு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். திருவடியாபிள்ளை கிழக்கேயிருந்து அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வந்தார்.

'அந்தப் பயல் முத்துக்காளை இன்று காலையில்தான் விடுதலையாகி வந்தான். வந்ததும் வராததுமாகப் பண்ணையார் வீட்டிலேயே நெருப்பு வைத்துவிட்டான்.வீடு பற்றி எரிகிறது. வாருங்கள். அக்கம் பக்கத்திலும் நெருப்புப் பரவிவிடுமோ என்று பஞ்சாயத்து போர்டு தலைவர் அஞ்சுகிறார். உங்களை உடனே கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.’

நான் பதில் பேசவில்லை. திருவடியா பிள்ளை பதறினார்.

'பிள்ளை அவர்களே! இந்த நெருப்பு பண்ணையார் வீட்டில் வைத்த நெருப்பு அல்ல. உங்கள் சமூக நீதியிருக்கிறதே, அதன் அழகான மூஞ்சியில் முத்துக்காளை என்ற ஒரு ஏழை வைத்த நெருப்பு! அந்த நெருப்பை இனி யாராலும் அணைக்க முடியாது. போய் வாருங்கள்! இப்போது நான் வர முடியாது’ என்று நிர்த்தாட்சண்யமாகச் சொன்னேன்.

(1960-க்கு முன்)