பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மண் குதிரை * 357

"அடேய் அந்தம்மாவுக்கு கொள்ளை காலத்தை' எடுத்துக் காட்டு, புதுசாக நேற்று வந்த தினுசுகளெல்லாம் காண்பி.

“சுப்பையா! நீ பத்துக் காஞ்சீவரம் பட்டுப் புடவையைக் கொண்டு போய் முதலியார் வீட்டிலே காட்டிவிட்டு வா. அவங்க வீட்டிலே நேத்தே சொல்லி யனுப்பிச்சிருந்தாங்க”

"அடேய் அப்பா துரைசாமீ. அதா பாரு எம்.எல்.ஏ. வீட்டு அம்மா காரிலே வாராங்க போய்க் கார்க் கதவைத் திறந்து அழைச்சுக்கிட்டு வா. கடைக்கு வர்றதாக இப்பத்தான் அந்தம்மா 'போனிலே' சொன்னாங்க.”

எதிர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் என்னோடு உரையாடும்போதே நான்குபுறமும் சுழலும் வியாபாரக் கண்களால் இத்தனை காரியத்தையும் சமாளிப்பார் அண்ணன். அந்த சமாளிக்கும் திறமையைக் கண்டு வியந்து கொண்டிருப்பேன் நான். அண்ணன் டெலிபோனில் பேசுகிற அழகைச் சொல்லாமல் விட முடியாது. நேரில் பார்க்கிறபோது பேசுகிற அதே குழைவு நெளிவை டெலிபோனிலும் காட்டுவார். அண்ணனுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் முக்கியமான ஆங்கில வார்த்தைகள் தெரியும். நாற்காலியில் அட்டகாசமாகச் சாய்ந்து கொண்டே,'டெலிபோனை' எடுப்பார். 'எஸ். ஸ்பீகிங்' இந்த இரண்டு வார்த்தைகளை மட்டும் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுப் பின்பு தமிழில் பேசுவார். "அப்படீங்களா... பரவாயில்லே... அனுப்புங்க. தரேன். நம்ம பணத்துக்கென்ன? வசதிபோலக் கொடுங்க. அதுக்கென்ன?. வணக்கம்” என்று பேசி போனை வைத்துவிடுவார்.

"தறுதலைப் பய; மாசம் எண்ணுறு ரூபாய் சம்பளம் வாங்கிறவன் புடவையைக் கடனாக் கொடுடாங்கிறான். எவன் வீட்டு முதலோ, தெரியலை” என்று போனை வைத்த சூட்டோடு எதிரே உட்கார்ந்திருக்கும் என்னிடம் சீறுவார் அண்ணன்.

“வியாயாரம் என்றால் நாலு விதமும்தான் இருக்கும்” என்று பொதுவாக மறுமொழி சொல்வேன் நான்.

'நாலாவது, விதமாவது! இந்த பெரிய மனுசங்க பழக்கத்தாலே கடனும், ஒசியும் கொடுத்திட்டு வருசத்துக்குப் பத்தாயிர ரூபாய் எங்கடையிலே நஷ்டக்கணக்கு எழுதறேன். யார் கிட்டப் போய்ச் சொல்றது? அத்தனை பேரும் நாணயமில்லாதவங்க, வெளியிலே பேரும் புகழும் வாங்கிடறாங்க. டாக்டர் பொன்னம்பலம் போன வருசம் 600 ரூபாய்க்கு மூணு பட்டுப்புடவை எடுத்தாரு. ஒரு வாரத்திலே "செக்” அனுப்பறேன்னிட்டுப் போனாரு இன்னும் அனுப்பப் போறாரு பார்லிமெண்ட் மெம்பர் பா.சு.ப. மகள் கலியாணத்துக்கென்று மூவாயிர ரூபாய்க்கு ஜவுளி கொண்டு போனாரு இன்னும் பாக்கி வந்தபாடில்லை. வீட்டுக்குப் போனா ஆள் அகப்படறதில்லை. 'டெல்லி போயிருக்காரு'ங்கிறாங்க டெல்லியிலிருந்து திரும்பினா வேறெங்கியாவது திறப்பு விழா, மூடுவிழான்னு ஊர் மேலே போயிடறாரு அட இவங்கதான் இப்படி இருக்காங்கன்னா இந்தச் சீர்திருத்தக் கழகச் செம்மல்னு ஊரெல்லாம் புகழ் பாடுறாங்களே 'செங்கமல வண்ணனார்' அவரும் இங்கே நம்ம