பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கடைக் கடன் பேரேட்டில் பல்லிளிச்சிட்டிருக்காரு” என்று அண்ணன் குறைபட்டுக் கொண்டதை நான் முழுவதும் நம்பத் தயாராயில்லை. உண்மையிலேயே பெருந்தன்மையும், நாணயமும் உள்ளவர்களை ஒரு மனிதன் குறைபடுத்திப் பேசுகிறானென்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். குறைத்துப் பேசுகிறவன் தன்னைக் குறுக்கு வழியில் பெரிய மனிதனாக்கிக் கொள்ள விரும்புகிறான் என்பதுதான் அந்தக் காரணம். இந்த மாதிரி நாகரிகமாகப் பொய்கள், புரட்டுக்கள் அண்ணனிடம் சற்று அதிகமாகவே உண்டு.

அண்ணனுக்கு என்னிடம் அந்தரங்கமான நம்பிக்கை.சில சமயங்களில் என்னிடம் அவர் சொல்வார்:

"இதெல்லாம் எதுக்கு மனசுவிட்டு உங்ககிட்டச் சொல்றேன் தெரியுமா? நீங்க கதை, நாவல்னு நாலு விதமும் எழுதறவங்க. பெரிய மனுசனின்னு பேர் பண்ணிட்டிருக்கிறவங்க எப்படி எப்படியிருக்காங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணும் பாருங்க."

இதைக் கேட்டு மனத்துக்குள் சிரித்துக் கொள்வேன் நான். அண்ணனிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவரைத் தேடி வேறு யாராவது முக்கியமான ஆட்கள் வந்தால் எனக்கு அவர்களை அறிமுகப்படுத்தி வைக்கிற விதமே தனியாக இருக்கும். . "நீங்க விழுந்து விழுந்து படிக்கிறீங்களே அந்தக் கதை அதும் பேரென்ன?. எனக்கு நினைவில்லையே. அதை எழுதறவரு இவருதான். எப்ப வந்தாலும் இங்கே நம்ம கடையிலே தான் ஆளைப் பாாக்கலாம். நமக்கு ரொம்ப வேண்டியவரு”

அண்ணனுடைய அறிமுகம் முறையாக இருக்காது. ஒரு பக்கம் சொல்லி இன்னொரு பக்கத்தைப் பற்றிச் சொல்லாமலே இருந்திடுவார். இரண்டு பக்கமுமே எல்லாவற்றையும் சொல்லிவிட்டுப் பேர்களை மட்டும் சொல்ல மறந்துவிடுவார்.

நான் வேறு வேலையே இல்லாமல் அவருடைய கடையே கதியென்று பழி கிடப்பது போலவும் - என்னைப் போலவே வெளியில் பேர் பெற்ற ஆட்களெல்லாம் அவர் மட்டில் சுட்டு விரலை அசைத்தால் ஓடி வந்து கும்பிடும் கூலிக்காரர்கள் போல் தான் என்று தோன்றும்படியும் - அண்ணன் மற்றவர்கள் முன் சொல்லிக் கொள்ளவும் நடந்து கொள்ளவும் காட்டிக் கொள்ளவும் ஆசைப்படுவார். புதிது புதிதாகத் தீப்பெட்டிப்படங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சிறுவன், பிற சிறுவர்களிடம் ஆணவத்தோடு காட்டிக் கொள்ள ஆசைப்படுவது போலத்தான் அண்ணனின் பழக்கம்.

வெளியே பெரிய பெரிய ஆட்களெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு படிக்கும் என் நாவல்களின் பெயர்கள் கூடத் தமக்கு நினைவிருப்பதில்லை என்று காட்டிக் கொள்வதில் தம் பெருந்தன்மையை நிலைநாட்ட முயல்வார். உண்மையில் அண்ணனுக்கு அந்தப் பெயர்கள் நன்றாக நினைவிலிருக்குமென்பது எனக்குத் தெரியும்,