பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அண்ணனிடம் எவ்வளவோ மாபெரும் குறைகள் இருந்தன. அவையெல்லாம் உலகத்துக்குத் தெரியாமலில்லை. தெரிந்த பின்னும் அண்ணனை மன்னித்துக் கொண்டிருந்தது. அத்தனை குறைகளையும் மூடி மறைக்கும் ஆற்றலுள்ள ஏதோ ஒரு கவர்ச்சியும் அண்ணனிடம் இருந்தது.

"இதோ பாருங்க. இந்த ஆண்டுவிழாவை அமோகமாக நடத்திப்பிடறதுன்னு நான் பொறுப்பு எடுத்துக்கிட்டேன். எனக்காக விட்டுக் கொடுக்காமல் நீங்க கூட இருந்து பரிமளிச்சிடனும்” என்று தன்னை முதலாக வைத்து வேண்டிக் கொள்வார் அண்ணன். அவருக்கு எப்போதுமே தன்னம்பிக்கை அதிகம்.

அண்ணன் பேச்சிலும், நடையிலும், முகத்திலும், வேகமாக அமுக்கி அடித்த பந்துபோல் ஏதோ ஒரு துள்ளல் இருக்கும். ஏதோ ஒர் அநியாயமான அவசரம் - வேண்டாத அவசரம் - அந்த முகத்தில், அந்தப் பேச்சில் அந்த நடையில் தெரியும்.

"அத்தனை ரயில் ஸ்டேசன்லேயும் சாப்பாட்டுக் கிளப்பை மூடிட்டானா என்னன்னு தெரியலை. இந்தப் பாதையா ரயில்லே போறவங்களுக்கு எல்லாம் சாப்பாடு கொண்டு போக நான் தானா ஆளு?” என்று என்னைப் பார்த்ததும் முன்பின் தொடர்பில்லாமல் புத்தகத்தை நடுப்பக்கத்தில் பிரித்துப் படித்த மாதிரியில் பேச்சைத் தொடங்குவார் அண்ணன்.

“என்ன சங்கதி? அண்ணன்கோபத்திலே இருக்கிறாப் போலிருக்கிறது” என்பேன் நான்.

“அதுக்கில்லே. இந்தச் செஞ்சொல் மாரியார் திருவரங்கனார் இந்தப் பாதையா ரயில்லே பட்டினம் போறாராம், டிபன் செட்டிலே சாப்பாடு கொண்டாந்து ரயில்லே கொடுக்கணுமாம். வேறே வேலை இல்லை” என்று சலித்துக்கொள்வார் அண்ணன்.

"லெட்டர் எழுதியிருக்கிறாரா?”

"லெட்டரா எழுதியிருக்காரு? சும்மா வரிஞ்சு தள்ளியிருக்காரு போனதடவை இங்கே வந்தப்ப நம்ம வீட்டிலே சாப்பிட்ட சாப்பாட்டை வரிஞ்சு வரிஞ்சு வருணிச்சிருக்காரு.”

நான் மனத்துக்குள் சிரித்துக்கொண்டேன். முக்கியமான பெரிய மனிதர்கள் அந்தப் பாதையாக ரயிலில் போகிற விவரம் தெரிந்து கொண்டு அவர்கள் தயவையும் அவர்களைப் போற்றும் பொதுமக்கள் தயவையும் பெறுவதற்காக அண்ணனே வலுவில் போய் உபசாரம் செய்துவிட்டு வருவார். ஆனால் அதை மற்றவர்களிடம் சொல்லும்போது அந்தப் பெரிய மனிதர்களே கடிதம் எழுதியதாகச் சொல்லுவார். பெரிய மனிதர்கள் அண்ணன் வாயில் புகுந்து புறப்படுகிற தொல்லையைப் பார்த்த பின்பு, நான் பெரிய மனிதனாக வேண்டும் என்ற ஆசையையே விட்டுவிட்டேன். சிறியவர்களுக்கு நடுவில் பெரிய மனிதனாக இருப்பது துன்பமான காரியம்தான். அண்ணனுடைய கடைக்குப் போவதையும் அவரோடு போய் அரட்டை அடிப்பதையும் விட்டுவிட வேண்டுமென்று பலமுறை முயன்றும், நெடுங்காலம்