பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி மண் குதிரை * 361

பழகிய பின்பு காப்பி குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாததைப் போலவே அதுவும் வெற்றி பெறாத முயற்சியாகவே இருந்தது.

‘என்னைப் பொறுத்தவரையில் அவர் புறம் பேசுவதில்லை, கடன் கொடுத்ததாக மற்றவர்களிடத்தில் பொய் சொல்லுவதில்லை என்று எண்ணியே அந்தப் பழக்கத்தை நீடிக்க விட்டுக் கொண்டிருந்தேன். பழக்க மிகுதி காரணமாக எத்தனையோ கெட்ட வாடிக்கைகளை விட முடிவதில்லை. மற்றவர்களுக்கு யோசனை சொல்வதிலும் அண்ணன் கெட்டிக்காரர்.

“வாங்க; என்ன ஒரு மாதிரிச் சோர்வாத் தெரியிறீங்களே. உடம்புக்கு ஏதாவது.” என்று ஒருவரை வரவேற்பார் அண்ணன். உண்மையிலேயே வந்தவருக்கு உடம்பிற்கு ஒன்றும் இல்லையானாலும், அண்ணன் விசாரிக்கின்ற விதத்தில் நலக்குறைவு இருப்பதாகச் சொல்லிவிடுகிற அளவுக்குப் பந்தம் உண்டாகிவிடும்.

“அசீரணக் கோளாறா? நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். பேசாமல் நான் சொல்கிறபடி செய்யுங்க. குருசாமி மூப்பனார் கடையிலே சுத்தமான மலைத்தேன், பாட்டில் பாட்டிலா விக்கிறாங்க. ஒரு பாட்டில் வாங்குங்க. தினசரி இராத்திரிப் படுக்கிறதுக்கு முன்னாடி 'கால் அவுன்ஸ்’ குடிச்சிட்டுப் படுத்தாப் போதும். பத்துநாளிலே உடம்பு சரியாகலேன்னா என்னைக் கேளுங்கள்.” என்று உத்தரவாதம் கொடுப்பார் அண்ணன். பார்க்கிறவர்களுடைய துன்பங்களை எல்லாம் இப்படி விசாரித்து அவர்களைத் தம் மனிதர்கள் போல் தழுவிக் கொண்டு அவர்கள் துன்பங்களுக்கு மருந்து சொல்கிற பழக்கம் அண்ணனிடம் அதிகம். வைத்தியருக்கு வைத்தியம் மட்டும்தான் தொழில் வக்கீலுக்குச் சட்டம் மட்டும் தான் தொழில். ஆனால் வியாபாரம் எல்லாம் கலந்த ஒரு தொழில், எல்லாம் தெரிந்ததாக நடிக்க வேண்டிய தொழிலும்கூட உதட்டுக்கு வெளியே பிறந்து உதட்டுக்கு வெளியே போய்விடக்கூடிய வெறும் அனுதாபத்தினாலேயே உலகத்தைத் தன் பக்கம் இழுக்கிறவன் வியாபாரி.

இவ்வளவு சாமர்த்தியமாக இருக்கக்கூடிய அண்ணன் தடுமாறிப் போய் அசடு வழிகிற சமயங்களும் எப்போதாவது ஏற்படும். ஆங்கில வார்த்தைகள் வரும்போது அண்ணன் குழறி விடுவார். ஒருமுறை அண்ணனுக்கு நண்பர் ஒருவர் தம்முடைய மைத்துனரை அண்ணனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்."இவர் என் 'ஒய்பி'னுடைய "ஒன்' பிரதர்” என்று தூய தமிழ் பேசிப் பழகாத குற்றத்தினால் ஆங்கிலமும் தமிழும் கலந்து அறிமுகப்படுத்தினார் நண்பர்.

அறிமுகம் முடிந்ததும் பதிலுக்கு ஏதாவது கேட்க வேண்டுமென்று வாய் குழறி ஒரு கேள்வி கேட்டார் அண்ணன். உங்கள் 'ஒய்ஃபின் ஒன் பிரதரா?' என்று கேட்பதற்குப் பதில் வாய் தடுமாறி, "உங்கள் 'ஒன் ஒய்ஃபா?' என்று கேட்டுவிட்டார் அண்ணன். சுற்றியிருந்த அத்தனைபேரும் அடக்கிக் கொள்ள முடியாமல் சிரித்துவிட்டார்கள். அண்ணன் ஆங்கில அறியாமையால் விளைந்த மானக்கேடு என்னைப்போல் அப்போது அருகிலிருந்தவர்களுக்குச் சகித்துக் கொள்ள இயலாததாக இருந்தது. ஆனால் அதற்குப் பின்பும் அண்ணனோடு பழகுவதை