பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

விட்டுவிடவில்லை. 'அண்ணன்' வழக்கம் போல் எனக்கு ‘அண்ண'னாகத்தான் இருந்தார்.

அவர் ஆயிரம் புறம் பேசினாலும், குறளை சொன்னாலும் அவனுக்குச் சோறு போட்டேன். இவனுக்குப் புடவை கடன் கொடுத்தேன் என்று புளுகினாலும், என்னைப் பொறுத்தமட்டில் ஒரு வம்பும் வைத்துக் கொள்வதில்லையே! நான் ஏன் அவர் பழக்கத்தை விட வேண்டும்?

அண்ணன் இன்று தினசரி வழக்கம்போல் வாய் நிறைய 'வாங்க' என்று என்னை வரவேற்றார். உட்காருவதற்குப் பையனை நாற்காலி கொண்டு வந்து போடச் சொல்கிறார். 'வெற்றிலை பாக்கு காப்பி ஏதாவது வாங்கி வரச் சொல்லவா’ என்று (வாங்கி வராவிட்டாலும்) கேட்கிறார். உலகத்தில் எத்தனை கெட்ட மனிதர்களும் யாராவது ஒருவருக்காவது நல்லவராக நாணயமானவராக நடந்து கொள்கிறார்களே! அப்படி அண்ணன் என்னை மட்டும் அந்தரங்கமாக வைத்துக் கொண்டு போற்றி வருவதாக எனக்குள் ஒரு திடமான நம்பிக்கை.

அன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக மாலைப் பொழுதைக் கழிக்க முற்றுகை போடுகிற இடமான 'அண்ணன் கடை' அன்றைக்கு விடுமுறை. பொழுதைக் கழிக்க என்ன வழி என்று தெரியாமல் ஆறுமணிமாலைக் காட்சிக்கு ஒரு திரைப்படத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். போகும்போது தாமதமாகி விட்டதால் படம் ஆரம்பித்து ஒடிக் கொண்டிருந்தது. படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குத் திரையை மறைக்காமல் ஒர் இடத்தில் போய் அமர்ந்தேன். நல்ல படம் அது. இடைவேளையின் போது விளக்கை அனைத்து விட்டு விளம்பரச் சிலைடுகள் காண்பித்தார்கள். அப்போது நான் உட்கார்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் எனக்குப் பழக்கமான குரல்கள் பேசிக் கொள்கிற ஒலி கேட்டது. நான் அந்தப் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினேன்.

"அவர் இந்த வாரம் ஒரு கதை எழுதியிருக்கிறாருங்க. பிரமாதமாக இருந்தது. நீங்க கட்டாயம் அதைப் படிக்கணும்”

“என்ன பிரமாதமா எழுதி என்ன பிரயோசனம்? வயிற்றுப் பாட்டுக்குத் தாளம் போடறாரு தினசரி எப்படா பொழுது விடியப் போகுதுன்னு காத்திருந்தாப்போல நம்ம கடைக்கு வந்து பஞ்சப் பாட்டுப் பாடறாரு நானும் என்னாலே முடிஞ்சதை ஒண்ணோ ரெண்டோ கையிலே கொடுத்து அனுப்பிகிட்டுத்தான் இருக்கேன்.”

"அப்படியா? அவரு நல்ல வசதியோட இருக்குறாரின்னில்ல நான் கேள்விப்பட்டேன்?”

"ஏன் இருக்க மாட்டாரு? மகாலட்சுமி ஜவுளி ஸ்டோர்ஸ் கல்லாப் பெட்டியிலிருந்து ஐயா பணத்தைப் பணமின்னு பாராமல் தினம் கொடுத்துக் கிட்டிருக்கிறாருங்கிறதை வெளியிலே நாலு பேருக்கிட்டேச் சொன்னா ஊர் சிரிச்சுப்பிடும். நான் இதெல்லாம் வலது கை கொடுக்கிறது இடது கைக்குத்