பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல் தொகுதி / மண்ணும் மாடியும் * 365

மாடி வீட்டின் முன்பு வந்து நிற்கிறாள். அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறாள். ஏழாவது மாடி முகப்பில் நின்று அவன் கீழே பார்க்கிறான். வானைக் கீறி ஒளிக் கோடிழுக்கும் மின்னல் ஒளியில் அவள் உருவம் சிறியதாய்த் தெரிகிறது. கிழிந்த ஆடையும், நனைந்த உடலும், நெகிழ்ந்த உள்ளமுமாக அவள் கீழே நிற்பதைக் காண்கிறான். அதைக் காண அவன் உள்ளம் உருகுகிறது. கொதிக்கிறது. 'அந்த விநாடியே ஏழு மாடிகளும் இடிந்து தவிடு பொடியாகி ஏகபோக சுக செளகரியங்களெல்லாம் இல்லாமற் போய்விடக் கூடாதா' என்று ஒரு துடிப்பு வருகிறது இளைஞனுக்கு. ஏழையாகிவிட வேண்டுமென்ற தாகம் ஏற்படுகிறது அவனுக்கு. ஏழையிலும் பரம ஏழையாக மாறிக் கீழே ஒடிப் போய் அங்கே நனைந்துகொண்டு நிற்கும் தன் காதலியின் அருகில் தானும் நின்றுகொண்டு நனைய வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது அவனுக்கு. உடனே ஏழையாக ஏழையிலும் கீழான பஞ்சைப் பராரியாக மாறிவிடவேண்டும்போல ஒர் ஏழையாகத் துடிக்கும் பசி, ஏழையாகத் தவிக்கும் தாகம் அவனை வாட்டுகிறது. அவன் கீழே இறங்குவதற்காகத் திரும்புகிறான். ஒவ்வொரு மாடிப்படியிலும் உறங்காமல் நிற்கிறார்கள் கூர்க்காக்கள். ஒவ்வொரு இடத்திலும் தடையாக ஒரு கதவு.

'இத்தனை கூர்க்காக்களையும், இத்தனை கதவுகளையும், கடந்து நான் ஏழையாக முடியாது! ஏழைக்கும், பணக்காரனுக்கும் நடுவில் இத்தனை கதவுகளா? இத்தனை காவலா? இத்தனை உயரமா? தெய்வமே என்னை இந்தக் கணமே ஏழையாக்கி விடு! என்னை மண்ணில் வாழ விடு! மழையில் நனைய விடு! இந்த மாடி வேண்டாம்' என்று மாடியில் நின்று கதறிக் கீழே நிற்கும் தன் காதலியை நோக்கிக் கதாநாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான்.

இந்தப்பாட்டை அற்புதமாகவும், உணர்ச்சிகரமாகவும் எழுதி முடிப்பதற்குத்தான் பரிபூரணம் ஏற்காட்டின் தனிமையை நாடி வந்திருந்தான். படத்தின் உச்சநிலைச் சம்பவமே கதாநாயகனின் இந்த மனமாற்றம்தான். அவன் மாடியில் நின்று ஏழையாவதற்குத் தவித்துக் கதறிக் கீழே இறங்கவும் இயலாமல் பாடுகிற பாட்டுத்தான் முக்கியமான அம்சம்.

பரிபூரணத்தோடு அந்தப் படத்தின் முதலாளியும் வந்திருந்தார். அவர் ஒரு 'நடிகை'யோடு வந்திருந்ததால் வேறு பங்களாவில் வேறு விதமாகத் தங்கியிருந்தார். அடிக்கடி வந்து அவனைச் சந்தித்துப் பாட்டு விரைவில் உருவாக வேண்டும் என்று அவசரப் படுத்திக்கொண்டிருந்தார் ."நாளைக் காலையில் நாம் பாட்டுடன் சென்னை திரும்புகிறோம். நாளைக்கு மாலையே பாட்டை ஒலிப்பதிவு செய்தாக வேண்டும். நீங்கள் வெளியே எங்கும் அலையாமல் இதே வேலையாக உட்கார்ந்து பாட்டை முடித்து விடவேண்டும்” என்று அன்று காலை கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தார் அவர்.

பரிபூரணம் தங்கியிருந்த பங்களாவின் தோட்டத்தில் ஒரு வேலைக்காரனின் குடிசை இருந்தது. அந்த வேலைக்காரனுக்கு ஒரு மகள். ஆனால் அரசகுமாரியாகப் பிறக்கவேண்டிய அத்தனை அழகு அவளுக்கு அந்த வேலைக்காரப் பெண் மட்டும்