பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அரச குமாரியாகப் பிறந்திருந்தால் தங்களுக்கு இவ்வளவு அழகு இல்லையே என்று அரசகுமாரிகளெல்லாம் தூக்குப் போட்டுக் கொண்டு செத்திருப்பார்கள்.அப்படி ஒரு வனப்பு அந்தப் பெண்ணுக்கு.

பேதைப் பருவம். புள்ளி மான் போலத் துள்ளிக் குதித்துக் கொண்டுவரும் ஒர் அழகு நடை வெள்ளைச் சிரிப்பு அதில் கள்ளத்தனம் இருக்காது. வேலைக்காரன் உடல்நலம் இல்லாதிருந்ததனால் இந்தப் பெண்தான் பரிபூரணம் கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்டுக் கொண்டிருந்தாள். குளிக்க வெந்நீர் வைத்துக் கொடுப்பது, துணிமணிகளைத் தோய்த்து உலர்த்துவது, ஒட்டலிலிருந்து எடுப்புச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து பரிமாறுவது எல்லாம் இந்தப் பெண்தான். பரிபூரணத்திடம் பயமோ, கூச்சமோ, இல்லாமல் குறும்புத் தனமாகச் சிரித்துச் சிரித்துப் பேசுவாள். நெளிநெளியாகச் சுருண்ட கருங்கூந்தலினிடையே தாமரை பூத்தது போல் முகம் அவளுக்கு கருவண்டு போல் சுழலும் கண்கள். உதடுகளும், முகமும், கண்களும், கன்னங்களும் எங்குமே சிரிப்பின் சாயலைப் போல எப்போதும் மலர்ச்சி தெரிகிற ஒர் அழகு அவளுக்கு இருந்தது. முழங்கால் வரை ஏறிய அழுக்குப் பாவாடையும் கந்தல் சட்டையுமாக உற்சாகமே வடிவாக இந்தப் பெண் நடந்து துள்ளிவரும் போது பரிபூரணத்திற்குக் கவிதையே இந்த ஏழைமை அழகில் ஓடிவருவதுபோலத் தோன்றும். வாழைத் தண்டு பட்டை உரித்தமாதிரி வெண்சிவப்பு மின்னும் அந்த முழங்காலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் பரிபூரணத்திற்கு அவா உண்டாகும். கவிதைத் தேவியே கன்னிமைக் கோலம் பூண்டு அப்படி அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறாளா?

உலகத்துக்குத் தெரியுமா, இப்படி ஒர் அழகு இந்த ஏற்காட்டு மலையில் இந்தக் குடிசைக்குள் இருக்கிறதென்று? தனிக்காட்டு மல்லிகைச் செடியாய், மலைச்சாரல் புள்ளி மானாய் அவள் தோன்றினாள் கவிஞன் பரிபூரணத்துக்கு.

பரிபூரணம் சொற்களை இணைத்து இசையை உருவாக்கும் கவிதையைத் தேடி அந்த மலைக்கு வந்தான். கண்களையும், இதழ்களையும், புன்முறுவலையும், சிற்றிடையையும், சிற்றடிகளையும் இணைத்துக் கொண்டு நடமாடும் கவிதையைத்தான் அவனால் அங்கே காணமுடிந்தது. அந்தக் கவிதை வேலைக்காரனுடைய குடிசைக்குள்ளிருந்து 'பொன்னி' என்ற பெயர் சூடி வந்து போய்க்கொண்டிருந்தது.

அன்று மாலை இருட்டத் தொடங்கிய சமயத்தில் மலையில் மழை பெரிதாகப் பிடித்துக் கொண்டுவிட்டது. பரிபூரணம் கவிதை என்கிற பிரசவ வேதனையில் நாற்காலியில் அமர்ந்து மேஜை மேலுள்ள வெள்ளைக் காகிதத்தைப் பார்த்துத் திணறிக் கொண்டிருந்தான். மழையும், இடியும், மின்னலும் பயங்கரமாகிக் கொண்டிருந்தன. கவிதை வரவில்லை. முதலாளியோ நாளைக் காலையில் கவிதையோடு சென்னைக்குப் புறப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். நட்சத்திரேயன் மாதிரிக் காலையில் வாசலில் காரோடு வந்து நின்று விடுவார் அவர். அவன் இப்படியோசித்துக் கொண்டிருக்கும் போது மழையைக் கிழித்துக் கொண்டு கீழேயிருந்து பொன்னியின் குரல் கேட்டது. பரிபூரணம் மாடியின் பால்கனிக்கு