பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47. ஜன்னலை மூடி விடு

விருந்தினர்களெல்லாம் ஊருக்குப் போய் விட்டார்கள். வாயிலில் மணப்பந்தல் பிரித்தாயிற்று. இரண்டு மூன்று நாட்களாக வெயில் தெரியாமல் இருந்த முன்புறத்தில் வெயில் தெரிகிறது. ஒரு பெரிய திருமணம் நடந்து முடிந்த சின்னங்கள் வீடு நிறையத் தோன்றுகின்றன. சந்தனமும், பூவும், பட்சணங்களும் நிறைந்திருக்கிறாற் போல வீடே மணக்கிறது. இன்னும் ஒரு மாதமானாலும் இந்த மணம் வீட்டிலிருந்து போகாது போல் இருக்கிறது. கலியாணத்துக்கு மணம் என்று பேர் வைத்திருக்கிறார்களே அந்தப் பேர்தான் எத்துணைப் பொருத்தமாக இருக்கிறது! கலியாணம் நடக்கிற வீட்டில் அதன் முன்னும் பின்னும், மண நாளிலும், எதுவென்றும், எதிலிருந்தென்றும் தெரியாமல் எல்லாம் கலந்ததாய் எல்லாவற்றிலிருந்தும் மணப்பதாய் வீடு முழுவதும் மங்கலமாகப் பரவி நிற்கிற மணத்தை அநுபவிக்கிற போதுதானே கலியாணத்தை மணம் என்று அழைப்பதன் பொருத்தம் புரிகிறது.

அவர் மணமகளின் தந்தை அந்தச் சில ஆண்டுகளாக அவரும் அவருடைய நோயும் வாசற் புறத்து அறையை விட்டு வெளியேறியதில்லை. அவருக்குப் பக்க வாதம். நடமாட முடியாமல் கிடக்கிறவர். தம் ஒரே பெண்ணுக்கு உறவினர்கள் உதவியுடன் திருமணம் முடித்து விட்டால் கேட்கவா வேண்டும். திருப்திக்கு சுப காரியம் நன்றாக நடந்து விட்டது.

அந்த அறையின் ஜன்னல் வழியாகத்தான் கொட்டு மேளத்தின் ஓசையை அவர் கேட்டார். அந்த ஜன்னல் கம்பிகளின் இடைவெளி வழியேதான் தம்முடைய பெண் மணக் கோலத்தில் அழகுச் சிலையாய் மையிட்டு மலர் சூடிக் கூறையுடுத்திக் குனிந்த தலையோடு வீற்றிருந்ததை அவர் பார்த்தார். அந்த ஜன்னல் வழியாகத்தான் தமது தளர்ந்த கையால் அட்சதையை அள்ளிப் போட்டு மணமக்களை வாழ்த்தினார். நல்ல வேளையாக அவருடைய அறையிலிருந்து மணச் சடங்குகள் நடந்த வீட்டுக் கூடம் தெரியும்படி அந்த ஜன்னல் அமைந்திருந்தது. பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கத் தம்பியையும், தம்பி மனைவியையும் கிராமத்திலிருந்து வரவழைத்திருந்தார். அன்னத்தைத் தம் கையாலேயே தாரை வார்த்துக் கொடுக்க வேண்டுமென்று அவருக்குக் கொள்ளை ஆசை. கால்களும், உடம்பும், நோய்க்குச் சொந்தமாகி, நோயைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட பின் அது எப்படி முடியும்? சபையிலும் அது நன்றாக இராது. அன்னத்தைப் பெண் வளர்ப்பது போலவா வளர்த்தார் அவர்? ஏதோ கிளிக்குஞ்சு வளர்க்கிற மாதிரிப் பொத்திப் பொதிந்து வளர்த்தார். தாயில்லாப் பெண்ணைத் தகப்பன் தனியாக இருந்து வளர்த்துப் பெரிதாக்குவதென்பது எத்தனை கடினமான காரியம் பிடிவாதமாக இரண்டாங் கலியாணம் செய்து கொள்ள
நா.பா. 1 - 24