பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மறுத்துவிட்டு வீட்டு வேலைளுக்காகச் சமையற்காரனைப் போட்டுக் கொண்டார். அவருக்கு நெஞ்சு உரம் அதிகம்.

அப்போது அந்த வயதில் இளமையின் இலட்சிய ஆர்வம் அவர் மனத்தில் கணக்கற்று நிறைந்திருந்தது. அவர் நிறையச் சம்பாதித்தார். நிறையச் செலவழித்து வசதியாக வாழ்ந்தார். திரைப்படங்களுக்கும், நாடகங்களுக்கும் பாடல் எழுதிக் கொடுக்கும் பெயர் பெற்ற கவி அவர். ஆயிரம் ஆயிரமாகப் பணம் குவியும்; புகழ் குவியும். அன்னத்தைப் பெற்றவள் இந்தப் புகழில் மோகங்கொண்டுதான் அவரைக் காதலித்து மணந்து கொண்டாள்.அன்னத்தின் தாயார் இறக்கும்போது அன்னத்துக்கு ஏழு வயது. அன்னம் என்பது அவர் அவளுக்குப் பிரியப்பட்டுச் சூட்டின பெயர். சின்ன வயதிலேயே அவளுடைய நடை தனி அழகுடன் இலங்கும். தான் நடந்து செல்கிற இடத்துக்கே தன்னுடைய நடையால் அழகு உண்டாக்கிக் கொண்டு நடக்கிறாற்போல நடப்பாள் அவள்.'கோமு' என்று ஏதோ பழைய கர்நாடகப்பேர் ஒன்றை அவளுக்குச் சூட்டியிருந்தாள் அவள் தாய்.

"உன்னை அழைக்கிற போதெல்லாம் உன்னுடைய அழகிய நடையைப் புகழ்கிற மாதிரி உனக்கு ஒரு பெயர் சூட்டப்போகிறேன், குழந்தாய்' என்று சொல்லி விட்டு ஆசையோடு அன்னம் என்று பெயர் சூட்டினார் அவர். ‘அன்னப் பறவை, தான் அழகாயிருக்கிறதோடு தான் நடந்து செல்கிற இடத்துக்கே தன் நடையால் அழகு உண்டாக்கும்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அவர்.

'கோமு’ என்ற பழைய பெயர் எல்லோருக்குமே மறந்துபோகும்படி செய்துவிட்டார் அவர். ‘அன்னம்' - என்று வாய் நிறைய அழைத்தவுடன் துவளத் துவள அன்ன நடைநடந்து வந்து"என்னப்பா கூப்பிட்டீர்களா? என்று பாசத்தோடு கேட்கிற நிகழ்ச்சி இனி இந்த வீட்டில் நடக்காது. இதோ இன்று இன்னும் சிறிது நேரத்தில் அவள் கணவன் அவளை அழைத்துக் கொண்டு இரயிலேறி விடப் போகிறான்.

கிழவருக்குக் கண்களில் நீர் முட்டிற்று, தன்னை யாரும் பார்த்துவிடாமல் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார். மண வீட்டில் அழலாகாதே!

‘இனி இந்த வீட்டில் என்ன இருக்கிறது? நானும் சமையற்காரனும், தனிமையும், ஏக்கமும்தான் இருக்கின்ற பொருள்கள். இந்த வீட்டில், இதன் முன்புறமுள்ள பூந்தோட்டத்தில், என் அறையில், எங்கும் அன்னம் நடந்து நடந்து ஒர் அற்புத அழகைப் படிய வைத்திருந்தாள்.

'ஊதுவத்தி அணைந்த பின்னும் அந்த மணம் இருக்கிற மாதிரி அந்த அழகு இனி இந்த வீட்டில் இருக்குமா? இந்த வீட்டில் தங்குமா?

'குழந்தாய்! உன்னைப் பெண் வளர்ப்பதுபோலவா வளர்த்தேன்? சக்தி உபாசனை செய்கிறவன்போல் அல்லவா உபாசனை செய்தேன். நீ இப்படி வளர்ந்து பெரியவளாய் வனப்பெல்லாம் பொலிய நின்று கொண்டு யாரோ ஒர் ஆண்பிள்ளையுடன் போவாய் என்று நினைத்தேனா?'