பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கிழவருக்குக் குரல் தழுதழுத்தது. பேசவரவில்லை. அழக்கூடாதென்று தான் அவர் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்துவிட்டது. சிறு குழந்தை போல் பொங்கிப் பொங்கி அழலானார் அவர்.

"இதென்னப்பா பச்சைக் குழந்தை மாதிரி. யாராவது பார்த்தால் சிரிக்கப் போகிறார்கள்? நான் எங்கே ஒடிப்போய்விடப் போகிறேன்? உங்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியுமா, அப்பா? மாதத்துக்கொரு முறை 'அவரை' அழைத்துக்கொண்டு கண்டிப்பாக இங்கு வந்து இரண்டு நாட்கள் இருந்துவிட்டுப் போவேன். எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்ப வேண்டிய நீங்களே இப்படி அழுதால் நான் என்ன செய்வது?”

அவள் குரலும் கம்மிற்று. பாசம் எத்தனை பொல்லாதது? தன்னுடைய புடைவைத் தலைப்பால் அப்பாவின் கண்ணீரைத் துடைக்கிறாள் அன்னம்.

அப்படியே இரண்டு கைகளையும் பற்றிக் கண்களில் ஒத்திக் கொள்கிறார் அவர்.

'இந்தக் கைகள் என்னுடையவை. இன்று இவற்றை நான் இழக்கிறேன்.

இதயமே வீங்கி வெடித்து விடும்போல் துக்கமாக இருந்தது அவருக்கு. இத்தனை துக்கத்தை இதற்கு முன்பு அவர் அடைந்ததில்லை. கல்யாணத்துக்குப் பாணிக்கிரஹணம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பெண்ணின் கையைக் கணவனிடம் பிடித்துக் கொடுக்கும்போதே தகப்பனுடைய கை ஒடியத்தான் வேண்டுமா?

வாசலில் சாமான்களை வண்டியில் ஏற்றுகிற ஓசை கேட்கிறது. இரயிலுக்கு நாழியாயிற்று' என்று மாப்பிள்ளையின் தாயார் கூச்சலிடுகிறாள். அந்த அறைக்கு வெளியே வீடே பிரயாணப் பரபரப்பில் இருக்கிறது. வீடு முழுக்கக் கட்டுச்சோறு மணக்கிறது.

'சாமான்களை வண்டியில் ஏற்றுகிறார்களா? அல்லது அவருடைய மனத்தில் பொங்கிக் கொண்டிருந்த பாசவுணர்வையே வாரி ஏற்றிக்கொண்டு போகிறார்களா?

"உடம்பைப் பார்த்துக்கொள், அன்னம் வெள்ளி, செவ்வாய் எண்ணெய்க்குளி தவறாதே. உனக்கு எப்போது எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எழுது. உன்னுடைய நினைப்பை முதலாக வைத்துக்கொண்டுதான் நான் இந்த வீட்டில் இருக்க வேண்டும். அடிக்கடி வந்து போய்க் கொண்டிரு” - குரல் அடைத்தது. மறுபடியும் அழலானார் அவர்.

அறை வாசலில் பூட்ஸ் ஒலி கேட்கிறது. அன்னத்தின் கணவன் வருகிறான் போலும், அவர் கண்களைத் துடைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தாற் போல் உட்காருவதற்கு முயல்கிறார்.

"வாருங்கள் மாப்பிள்ளை!”

மாப்பிள்ளையும் அன்னமும் விழுந்து வணங்குகிறார்கள். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.