பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48. புதிய பாலம்

மூகத் தொண்டன் பொன்னம்பலம் நாயாக அலைந்தான். அலையா விட்டால் முடியுமா? எடுத்துக் கொண்டிருப்பது எத்தனை பெரிய காரியம்? எவ்வளவு பெரிய பொறுப்பு? தொண்டு செய்வதும், பொதுக் காரியங்களுக்காக அலைவதும்தான் அவனால் செய்ய முடிந்த சுலபமான காரியங்கள். இதை இப்படிச் சொல்வதைக் காட்டிலும், பொதுத் தொண்டுகளுக்காக அலையாமலும், பாடுபடாமலும் இருக்க முடியாத ஆட்களில் அவனும் ஒருவன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அவன் சர்வ சாதாரணமான ஏழை மனிதன்தான். பணத்தை வாரி வழங்க அவனால் முடியாது. ஆனால் உழைப்பை வழங்க முடியும். அந்த உழைப்பு என்னும் குறையாத நிதியைச் சமூகப் பணிக்கும், பொதுக் காரியங்களுக்கும் செலவழித்துக் கொண்டிருந்தான் பொன்னம்பலம்.

வடக்குக் கரையில் உள்ள ஊரையும், தெற்குக் கரையில் உள்ள ஊரையும் ஓர் ஆறு குறுக்கே பாய்ந்து பிரித்துக் கொண்டிருந்தது. சிறிய ஆறுதான். வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மணல்தான் ஒடும். எஞ்சிய நான்கு மாதங்களிலோ இரு கரையும் மீறிக் கடுமையாகத் தண்ணிர் பாயும்.இந்த ஆற்றுக்குச் சரியான பாலம் இல்லாமல் அக்கரை ஊர்க்காரர்களும், இக்கரை ஊர்க்காரர்களும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர். எவனோ சோழ அரசன் காலத்தில் கட்டின பழைய கல் பாலம் ஒன்று ஊரிலிருந்து, வெகு தூரத்துக்கு விலகிப் பத்தாவது மைலிலோ, பதினைந்தாவது மைலிலோ இருந்தது. கரையோரமாகவே அந்தப் பாலம் வரை போய்ச் சுற்றி வளைத்து அக்கரை அடையலாமே என்றால் சுற்று வழி காரணமாக அநாவசியமான கால தாமதம் ஆயிற்று. அந்த இரண்டு ஊர்களுக்கும் வசதியாக ஊரை ஒட்டி ஒரு பாலம் இருந்தால் எவ்வளவோ நன்மையாக இருக்குமென்று எல்லோரும் விரும்பினார்கள். சமூகத் தொண்டன் பொன்னம்பலம் இந்த விருப்பத்தை வளர்த்தான்.

ஐந்தாண்டுத் திட்டம், சமூக வளர்ச்சித் திட்டம், கிராம நலத் திட்டம் என்று என்னென்னவோ திட்டங்கள் போட்டிருக்கிறார்களே, அதற்கெல்லாம் இரண்டு ஊர் மக்களிடமும் கையெழுத்து வாங்கி விண்ணப்பம் அனுப்பினான் பொன்னம்பலம். பாலத்துக்கு அஸ்திவாரக் கல் போடுவதற்கு ஒரு மந்திரி, பாலம் முடிந்தபின் அதைத் திறந்து வைப்பதற்கு வேறொரு மந்திரி என்று வருவதைச் செய்தித்தாள்களில் நிறையப் படித்திருக்கிறான் பொன்னம்பலம். தங்கள் ஊர்ப் பாலத்தையும் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் எடுத்துக் கொண்டு அரசாங்கத்தார் முடித்து வைப்பார்கள் என்று பொன்னம்பலம் கருதினான். ஆனால் அரசாங்கத்தாருக்குக் குருவிப்பட்டிக்குப் பாலம் போட முயல்வதை விடப் பெரிய வேலைகள் எல்லாம் இருந்தன. குருவிப்பட்டிக்குப்