பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / புதிய பாலம் * 375

பாலம் போடாவிட்டால் இப்போது ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது' என்று பேசாமல் இருந்துவிட்டார்கள். எத்தனையோ உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டிய தீவிரமான அரசியல் சூழ்நிலையில் குருவிப்பட்டியின் பாலத்தைப் பற்றி நினைவு வைத்துக் கொள்வதே கேவலமல்லவா? எனவே குருவிப்பட்டியிலும் அதன் எதிர்க்கரையிலும் உள்ள மக்களைத் தவிர, 'குருவிப்பட்டிப் பாலம்' பற்றி வேறெவரும் நினைவு வைத்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள்.

அதற்கென்ன செய்வது? அரசாங்கத்திலிருப்பவர்களுக்குக் கண்டதையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டு திரிய முடியுமா? தாங்கள் அரசாங்கத்தில் இருப்பதே சில சமயங்களில் மறந்து விடுகிறதே அவர்களுக்கு. 'ஆகவே குருவிப்பட்டியும் அதன் பாலமும் எக்கேடு கெட்டுப் போனால் என்ன?’ என்று விட்டுவிட்டார்கள்.

ஆனால் குருவிப்பட்டி வாசிகள் அப்படி விடுவதற்குத் தயாராயில்லை. அந்தப் பட்டிக்காட்டு மனிதர்களிடம் உழைப்பு இருந்தது. தன்மானம் இருந்தது. தங்களையும், தங்கள் ஊர்ப் பாலத்தையும் பற்றித் தங்களிடம் ஒட்டு வாங்கிக் கொண்டு பதவிக்குப் போனவர்களே மறந்ததை அவர்கள் மன்னித்துத்தான் தொலைக்க வேண்டியிருந்தது. மன்னிப்பு என்கிற பரஸ்பர பலவீனம் இல்லாவிட்டால் இந்த உலகம் தான் என்றைக்கோ உருப்பட்டுத் தேறியிருக்குமே! எத்தனையோ அயோக்கியர்களையெல்லாம் சுலபமாகப் புண்ணிய பாவங்களின் பேர் சொல்லி மன்னித்துவிட்டுக் குட்டிச்சுவராய்ப் போய் கொண்டிருக்கிற பெருமை இந்தப் பாரத நாட்டிற்குப் புதிதா என்ன?

குருவிப்பட்டிப் பெருமக்களும், அவர்களின் அன்புக்குரிய சமூகத் தொண்டனாகிய பொன்னம்பலமும் இறுதியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். தங்கள் ஊர் ஆற்றின் குறுக்கே பாலம் போடுவதற்குத் தங்கள் ஊரைப் பற்றி அக்கறையும், நினைவும் இல்லாத அரசாங்கத்தை நம்பிப் பயன் இல்லை. ஒருவேளை அரசாங்கத்துக்குத் தங்களுடைய ஆட்சியின் கீழே குருவிப்பட்டி என்று ஒரு கிராமம் இருப்பதே மறந்து போயிருக்கலாம். எனவே தங்கள் ஊர்ப்பாலத்தைத் தாங்களே அமைத்துக் கொள்வது என்ற திடமான முடிவுக்கு வந்தார்கள். அந்த முடிவுக்கு வருமாறு அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்தவன் பொன்னம்பலம்தான்!

ஊர்ப் பக்கத்திலிருந்த கருங்கல் குன்றிலிருந்து பாலத்துக்கான கற்கள் உடைக்கப்பட்டன. ஊர்ப் பொதுவில் ஒரு பெரிய சுண்ணாம்புக் கானவாய் போட்டுக் காரை நீற்றினார்கள். சில அவசியமான செலவுகளுக்காக இரண்டு ஊர்ப் பொது மக்களிடமிருந்தும் பொன்னம்பலம் ஒரு நிதி வசூல் செய்திருந்தான். அதற்காகத்தான் அவன் நாயாக அலைந்து பாடுபட்டான் என்று தொடக்கத்தில் குறிப்பிட்டோம். இரண்டு கிராமத்து மக்களும் தங்கள் வேலை நேரம் போக எஞ்சிய நேரமெல்லாம் பாலத்துக்காக உழைத்தனர். ஆண், பெண், இளைஞர், முதியோர் வேறுபாடின்றி எல்லோரும் பாலத்துக்காகப் பாடுபட்டனர்.