பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஏழெட்டு மாதங்களில் பாலம் முடிந்தது. மிகவும் நல்லவரான குருவிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவரைக் கொண்டு ஊரார் உழைப்பால் உருவான அந்தப் பாலத்தைத் திறந்து வைக்கச் செய்தான் தொண்டன் பொன்னம்பலம். எல்லோரும் பொன்னம்பலத்தின் உழைப்பைப் பாராட்டினார்கள், கொண்டாடினார்கள்.

விவசாயத்தையே தொழிலாகக் கொண்ட இரண்டு ஊர் மக்களும் அந்தப் பாலம் உண்டானதால் ஏற்பட்டநன்மையை அனுபவித்தார்கள். ஏர் பூட்டிய உழவு மாடுகள், கட்டை வண்டிகள், வைக்கோல் வண்டிகள், எல்லாம் பாலத்தின் வழியாக வந்து போய்க் கொண்டிருந்தன.இரு ஊர்களின் உறவும், பழக்கமும் பாலத்தால் நெருங்கிற்று. இரண்டு ஊர்மக்களும், விவசாயிகள் ஆதலால் பாலம் வண்டிகளின் போக்கு வரவுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இன்றியமையாததாகவும் இருந்தது.

குருவிப்பட்டிக்கு அப்பாலுள்ள பிரதேசம் வேறு மாகாணத்தைச் சேர்ந்தது. அங்கே மதுவிலக்கு இல்லை. குதிரைப்பந்தயம் உண்டு. எனவே குடிப்பதற்கும், குதிரைப் பந்தயத்துக்கும் பத்து மைல் சுற்றிச் சோழ அரசன் காலத்துக் கல் பாலம் வழியாகப் போய்க் கொண்டிருந்த பணக்காரர்கள் அது சுற்று வழி என்று கருதி இப்போதெல்லாம் குருவிப்பட்டிப் பாலம் வழியாகப் போகத் தொடங்கினார்கள். சமூகத் தொண்டன் பொன்னம்பலமும், ஊர்ப் பொதுமக்களும் கட்டின பாலம் ஏதோ சுய தேவைக்காகச் சுருங்கிய அளவில் கட்டப்பட்டிருந்தது.

முக்கியமாகக் கிராம மக்களின் தேவையை உணர்ந்து உழவு மாடுகளும், கட்டை வண்டிகளும், வைக்கோல் பாரவண்டிகளும், போவதற்காகக் கட்டப்பட்ட அந்தப் பாலத்தில் இப்போது கார்களும், லாரிகளும் போகத் தொடங்கிவிட்டதால் கிராம மக்கள் இடையூறு அனுபவித்தனர். கட்டை வண்டிகளும், மாடுகளும், ஊடேநுழைய நேரமே இன்றி அந்தப் பக்கமிருந்தும், இந்தப் பக்கமிருந்தும் லாரிகளும், கார்களும் மொய்த்தன. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனானாம் என்பது போல ஊர்க்காரர்கள் போட்ட பாலம் ஊர்க்காரர்களுக்குப் பயன்படாமல் கார்க்காரர்களுக்குப் பயன் படத் தொடங்கி விட்டது. ஒருநாள் குதிரைப் பந்தயத்துக்குப் போய்விட்டுத் திரும்பிய பட்டினத்துப் பணக்காரர் ஒருவர் நிறையக் குடித்து விட்டுப் போதையோடு மிகப் பெரிய பியூக் காரில் வந்தார். கார் குருவிப்பட்டி பாலத்தில் வரும்போது ஒரு கட்டை வண்டியில் மோதி வண்டிக்காரன் கீழே கார்ச் சக்கரத்தின் அடியில் விழுந்து நசுங்கி இறந்து போனான். இந்தச் சம்பவம் குருவிப்பட்டிக்காரர்களின் கண்களைத் திறந்தது. மறுநாள் முதல் அந்தப் பாலத்தில் கார்களையும், லாரிகளையும் விடுவதில்லை என ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து மறியல் செய்தார்கள்.

குதிரைப் பந்தயத்தையும், குடியையும் நினைத்துக் கொண்டு ஆவலோடு குருவிப்பட்டிப் பாலத்தை நோக்கிப் பறந்த கார்கள் மறியலின் காரணமாக ஏமாற்றத்தோடு திரும்பிப் போயின.

பாலத்துக்குள் நுழைகிற இடத்தில் சமூகத் தொண்டன் பொன்னம்பலம் இன்னும் நாலைந்து பேரைச் சேர்த்துக் கொண்டு நுழைய இடமின்றிக் கைகோர்து நின்றான்.