பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / புதிய பாலம் * 377

ஒரு பெரிய கார்க்காரர் அவர்களுடைய மறியலைப் பொருட்படுத்தாமல் இறங்கி வந்து கூப்பாடு போட்டார்.

“இது உன் அப்பன் வீட்டுப் பாலமில்லை. நீ யார் மறியல் செய்வதற்கு? அத்தனை ‘மினிஸ்டரையும் எனக்குத் தெரியும். ஒருவரி எழுதிப்போட்டால் உங்களையெல்லாம் உள்ளே தள்ளிவிடுவார்கள்.”

பொன்னம்பலம் அவருடைய பேச்சைக் கேட்டுக் கோபம் அடையவில்லை. அமைதியாகவே அவருக்குப் பதில் சொன்னான். "ஐயா! இது ஊர் மக்களின் உழைப்பால் உருவான பாலம். கட்டை வண்டிகளும், உழவு மாடுகளும் போவதற்காகத்தான் ஏழை விவசாயிகளாகிய நாங்கள் இந்தப் பாலத்தைக் கட்டினோம். இந்தப் பாலத்தைக் கட்டுவதற்காக அரசாங்கம் கால் பைசா எங்களுக்குத் தரவில்லை. இப்போதோ எந்நேரமும் கார்களும், லாரிகளும் இந்தப் பாலத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இரண்டு கிராமத்து வண்டிகளும் போக முடிவதில்லை. நாங்கள் உழைத்ததன் பயன் வீணாவதை எங்களால் மன்னிக்க முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் இந்தப் பாலத்தில் ஒரு கட்டை வண்டிக்காரன் காரில் நசுங்கி இறந்து போனான். இனியும் குடிகாரர்களுக்கும், குதிரைப் பந்தய வெறியர்களுக்கும் இந்தப் புனிதமான பாலம் பயன்படுவதை நாங்கள் அனுமதிக்கத் தயாராயில்லை.”

“நான்சென்ஸ்! நான் யார் தெரியுமா? என்னிடம் இவ்வளவு திமிராகப் பேசுகிறாயே? நான் சுட்டு விரலை ஆட்டினால் இந்த நாட்டை ஆளும் அத்தனை மந்திரிகளும் ஓடிவந்து கைகட்டி நிற்பார்கள். தெரியுமா உனக்கு?”

“அது எனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை ஐயா! இப்போது நீங்கள் இந்தப் பாலத்தின் வழியாகப் போக முடியாது. வணக்கம். திரும்பிச் செல்லலாம் நீங்கள்” என்று பேச்சை முடித்தான் பொன்னம்பலம்.

அவனை முறைத்துவிட்டுக் காரில் போய் ஏறிக் கொண்டு திரும்பினார் அவர்.

மறியல் தொடர்ந்து நடந்தது. கட்டை வண்டிகளையும், உழவு மாடுகளையும் தான் பாலத்தில் போகவிட்டார்கள்! கார்களையும், லாரிகளையும் போகவிடவில்லை. அதற்காகக் கார்க்காரர்களையும் லாரிக்காரர்களையும் கொடுமைப்படுத்தவில்லை. “இந்தச் சிறு பாலம் கிராம மக்களின் நலனுக்காக நாங்கள் போட்டது. தயவுசெய்து இதை நாங்கள் உங்களுக்கு விடாமலிருப்பதற்காக மன்னியுங்கள். சிறிது தொலைவு போனால் கல் பாலம் ஒன்றிருக்கிறது. அது அரசாங்கத்துக்குச் சொந்தமான பொதுப்பாலம். அதை உபயோகப்படுத்துங்கள், இங்கே வராதீர்கள்” என்று பணிவாகச் சொல்லித் திருப்பி அனுப்பினார்கள்.

கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள். பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் அரசாங்கத்துக்கு வேண்டியவர்கள்.கேவலம் ஒரு பட்டிக்காட்டுப்பாலத்தில் போக முடியாது என்றால் சும்மாவா இருப்பார்கள்? அவர்களால் ஆகாததும் உண்டோ? இருந்த இடத்திலிருந்தபடியே 'மினிஸ்டரோடும்’ "ஹைவேஸ் கமிஷனரோ'டும் டெலிபோனில் பேசினார்கள். அந்தப் பட்டிக்காட்டான்கள் செய்யும் 'அக்கிரமத்தை' எடுத்துக் கூறினார்கள்.