பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



அதன் விளைவு. மறுநாள் குருவிப்பட்டி பாலத்தில் ‘ஹைவேஸ் அதாரிடி’யோடு கூடிய விளம்பரப்பலகை ஒன்று தொங்கியது.

இந்தப் பாலத்தின் வழியாகக் கார்கள், லாரிகள் தவிரக் கட்டை வண்டிகள் போகக்கூடாது. இது அரசாங்க உத்தரவு. மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

இப்படிக்கு,
கமிஷனர் -
அரசாங்க ஹைவேஸ் இலாகா

சமூகத் தொண்டன் பொன்னம்பலமும், ஊர்க்காரர்களும் மறியலை நிறுத்தவில்லை. அரசாங்க உத்தரவையும் எதிர்த்து மறியல் செய்தனர்.

சும்மா இருப்பார்களா அரசாங்கத்தார்? வண்டி வண்டியாக லாரி நிறைய ஸ்பெஷல் ரிசர்வ் போலீசார் வந்து இறங்கினார்கள். அடிதான், உதைதான். அடி உதைக்குப் பயந்து பெரும்பாலோர் மறியலைக் கைவிட்டு ஓடிவிட்டனர். பொன்னம்பலமும் இன்னும் இரண்டு மூன்று ஆட்களும் மறியலை நிறுத்தவே இல்லை.

“இந்தப் பாலம் எங்கள் பிறப்புரிமை. இதை விட்டுக் கொடுக்கமாட்டோம். எங்கள் உழைப்பு எங்களுக்கே சொந்தம்” என்று கோஷமிட்டான் பொன்னம்பலம்.

“போடுடா அவன் மண்டையிலே!” முரட்டுப் போலீஸ்காரன் ஒருவன் அவனை அடித்தான்.

மண்டையிலிருந்து குருதி ஒழுகக் கீழே வீழ்ந்தான் பொன்னம்பலம். பிரக்ஞை தவறியது.

மறுபடி அவன் தன் நினைவுற்றுக் கண்திறந்து பார்த்தபோது பாலத்தில் கார்களும், லாரிகளும் சுகமாகப் போய்க் கொண்டிருந்தன.

“இந்த உருப்படாத சமூகத்துக்கு இதுமாதிரிப் பாலங்கள் இன்று தேவை இல்லை. ஏழைகளுக்கும் நியாயத்துக்கும் நடுவிலிருக்கிற தூரத்தை இணைக்க முதலில் ஒரு புதிய பாலம் போடவேண்டும். அதைக் கல்லாலும், காரையாலும் போடமுடியாதே!” என்று முணுமுணுத்துக்கொண்டே எழுந்து தள்ளாடி நடந்தான் அவன்.

(தாமரை, ஜூலை, 1960)