பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49. பச்சைக் குழந்தைகள்

“வாங்கிக் கொண்டு வந்த விறகு அத்தனையும் ஈரம். கண் அவிகிறது. சோறு அவிய மாட்டேன் என்கிறது. வேறு ஏதாவது வழி செய்யுங்கள். இல்லாவிட்டால் ஓட்டலில் சாப்பிட்டு விட்டுப் புறப்படுங்கள்.”

“சந்திரமதி பச்சை வாழை மட்டையை வைத்து எரித்தாளாமே! கேவலம் ஈர விறகை எரிக்கக்கூட…”

என் வேடிக்கை அவளுக்குப் பிடிக்கவில்லை. முகத்தைச் சுளித்தாள். “நீங்கள் ஒன்றும் அரிச்சந்திரன் இல்லை. நானும் சந்திரமதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வாங்கிப் போடத் தெரியா விட்டாலும் வாய் இருக்கிறது.”

“பொறு, தாயே! போர் முரசு கொட்டாதே. இதோ உனக்கு வழி செய்கிறேன்” என்று மேலே பரணில் ஏணியைச் சாத்தினேன். நாற்காலியின் ஒடிந்த 'கைகள்’, தட்டு முட்டு மரச் சாமான்கள், பார்சல் வந்த சாதிக்காய்ப் பெட்டி உடைசல்கள்- போன்றவை பரணில் குவிந்து கிடக்கின்றன. இந்த மாதிரி அவசர நேரத்துக்கு விறகாகப் பயன்படுவதைத் தவிர அவற்றுக்கு வேறு என்ன நல்ல உபயோகம் இருக்க முடியும்?

“எங்கள் வீட்டைஎன்னவென்று நினைத்தாய்? எந்த அவசரத் தேவைக்கும் இங்கே சாமான் அகப்படும். இந்தப் பரண் இருக்கிறதே இது ஒரு பெரிய பொக்கிஷம் மாதிரி. பல் தேய்ந்து போன தேங்காய்த் துருவியிலிருந்து, நான் படித்துக் கிழித்த ஆக்ஸ்போர்ட்டு ‘அட்லாஸ்’ வரையில் எல்லாம் இதற்குள் அடக்கமாக்கும்” என்று பெருமிதத்துடன் கூறிக் கொண்டே அன்றைய அடுப்புக்குப் போதுமான விறகைக் கீழே தள்ளினேன்.

‘இரண்டு மூன்று நாற்காலிக் கைகள், ஒரு சாதிக்காய்ப் பெட்டி உடைசல்’ இவைதான் அன்றைய விறகுக்கு அகப்பட்டவை.

“இன்னும் கொஞ்ச நாட்கள் காரியம் பார்த்து இப்படி அடுப்பில் அவிந்தால், என்னையும் அந்தப் பரணில் தூக்கிப் போட வேண்டியதுதான்” என்று அலுத்தபடியே அந்த அவசர விறகை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் துணைவி.

பரணிலிருந்து கீழே இறங்கு முன் காலில் ஏதோ இடறியது. ஒற்றைக் கை ஒடிந்த பழைய மரப்பாச்சி. மூக்கு முழி தேய்ந்த பழுக்காப் பொம்மை.

காலில் இடறி ஏணிக்குப் பக்கத்தில், கீழே விழுந்தது மரப்பாச்சி. அந்த மரப்பாச்சியோடு என் மனமும் கீழே போய் விழுந்தது. வீடு, அடுப்புப் புகை, அப்போதைய சூழ்நிலை எல்லாம் மறக்கத் தொடங்குகிறது. அப்படியே பரணில் ஒரு