பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

காலும் ஏணியில் ஒரு காலுமாக உட்கார்ந்துவிடுகிறேன். அந்த மரப்பாச்சியைப் போலவே உருத் தெரியாமல் மனத்தினுள் ஒடிந்தும் தேய்ந்தும் மூளியாகிப் போயிருந்த மொட்டைநினைவுகள் தளிர்க்கின்றன. நான் என்னுடைய புலன்களோடு நத்தைபோல் என்னுள்ளேயே ஒடுங்குகிறேன். என்னுள் ஏதோ மணக்கிறது. என்னுள் ஏதோ தவிக்கிறது. என்னுள் எதையோ உணர்கிறேன். தண்ணீர்ப் பரப்பில் கோடு கோடாய்க் கோலம் கோலமாய் இழுத்து வரைந்து வரைந்த வேகத்தில் அழிக்கும் நீர்ப்பூச்சி போல் என் மனம் அழிவின் கோடுகளை, அழியும் கோடுகளை இழுக்கிறது. அழித்த கோடுகளை அதே இடத்தில் மறுபடியும் போட்டுப் பார்க்கும் ஆசை எனக்கு உண்டாகிறது. ஏன் உண்டாகிறதோ?

பொய்களை அடுக்கடுக்காகத் தொடுத்து வைத்த தொடுப்புக்குத்தான் வாழ்க்கை என்று பேரோ? நேற்றும், இதற்கு முன் தினமும், நடந்தனவெல்லாம் இன்று பொய்கள் தாமா? இல்லாவிட்டால் அந்தப் பழைய நாட்களை இத்தனை காலத்துக்கு இப்படி மறந்திருப்பேனா?

‘மாயா' இன்று எங்கு எந்தக் கிருகத்துக்கு இலட்சுமியாக விளங்கிக் கொண்டிருக்கிறாளோ? அவள் எந்தக் கிருகத்திலிருந்தாலும் இலட்சுமியாக இருப்பாள்.அவள் இருக்கிற கிருகத்தில் இலட்சுமிகரம் பொங்கி வழியும்.செளந்தரியம் கதிர் பரப்பிக் கொண்டிருக்கும். 'மாயா' என்று என்ன காரணத்துக்காக, என்ன அர்த்தத்துக்காக அவளுடைய பெற்றோர்கள் அவளுக்குப் புதுவிதமாகப் பெயர் சூட்டினார்களோ?

என்னுடைய வாழ்வில் அவள் மாயையாய்த் தான் விளையாடி விட்டுப் போயிருக்கிறாள். அவளே ஒரு பெரிய மாயைதான். உலகத்திலேயே மாயைக்குத்தான் அதிக அழகும், அதிகக் கவர்ச்சியும் உண்டென்று வேதாந்திகள் சொல்லுகிறார்களே, அது பொய்யன்று.

மாயாவின் முகம், மாயாவின் கொள்ளையழகு, குலவி நிற்கும் கோல விழிகள், மாயாவின் சிரிப்பு, மாயாவின் எழில் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு மாயம் இருக்கத்தான் செய்தது. ஒரு பெரிய காவியத்தின் நாயகியாகத் துலங்க வேண்டிய அழகு அந்த ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத் தேடிக் கொண்டு வந்து குடியிருந்தது.

பொன் நிறமும், மஞ்சள் நிறமும் கலந்து இணைந்தாற் போலக் கண்ணில் பளீரென்று படுகிற மாதிரியில் சண்பகப் பூக்களுக்கு ஒர் அபூர்வ நிறம் வாய்த்திருக்குமே; அப்படி நிறம் மாயாவுக்கு. அவளுடைய சுட்டுவிரலை மட்டும் தனியே நீட்டச் சொல்லிப் பார்த்தால் சண்பகப் பூவைச் சுருக்கம் படாமல் சுருட்டின மாதிரி இருக்கும்.

வெண்சங்குக் கழுத்தில் கறுப்புப் பட்டுக் கயிற்றில் முடிச்சு முடிச்சாகப் போட்டு ஏதோ இரட்சைக் கயிறு என்று கட்டிக் கொண்டிருப்பாள். கோடி கோடிப் பொற் சங்கிலிகளும், காசு மாலைகளும், நெக்லெஸ்களும், போட்டாற் கூட என் ‘மாயா'வின் கழுத்துக்கு அத்தனை அழகு கிட்டாது. முத்துமுத்தாக முடிச்சிட்ட அந்த ஒரே ஒரு