பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி பச்சைக் குழந்தைகள் 381

கறுப்புக்கயிறு வெண்சிவப்புக் கழுத்துக்கு இணையிலாப் பேரெழில் கூட்டிக் காட்டும் வண்ணம் பெண்ணாய்ப் பேரமுதாய்ப் பெருங்கனவாய் வந்து நிற்பாள் அவள்.

உலகத்தில் எல்லாப் பெண்களுக்கும் விதவிதமாக நிறம் நிறமாகக் கண்ணாடி வளையல்கள் கிடைக்குமென்றால் மாயாவின் கைகளுக்கென்று எங்கிருந்தோ அந்தக் கரிவளையல்கள் கிடைக்கும். ஒரு வேளை அந்த எளிய கரிவளையல்களினால் தான் அவளுடைய கைகளில் அரிய அழகு உண்டாகித் தோன்றிக் கொண்டிருந்ததோ? ஜோடி மூன்று ரூபாய்க்கு மலிவாகக் கிடைக்கக்கூடிய கல் வெள்ளிக் கொலுசுகளை அணிந்திருப்பாள் பாதங்களில், தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல் அத்தனை ஒழுங்காக அத்தனை சுகமாக அவளுக்கென்று வாய்த்த பாதங்கள் போலும் அவை!

மலைச்சரிவுகளில் அருவி இறங்குகிறமாதிரி ஒரு பக்கமாக அசைந்தசைந்து தென்றல் கொஞ்சிக் கொண்டு வருகிறாற்போல் நடப்பாள் மாயா. அவள் அருகில் இருக்கிறபோது அவளைத் தவிர வேறெதன் மேலும் கவனம் செலுத்திப் பார்க்கவிடாமல் பண்ணிவிடுகிற எழிலைக் கொண்டிருந்தவள் மாயா.

இதோ இந்த வீட்டின் மேல் வீட்டு வாசலில் அந்த வேப்ப மரத்தின் அடியில் சொப்புகளும் கையுமாகப் பாவாடை கட்டின சிறுமியாக வந்து நின்றுகொண்டு 'அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாம்' என்று இந்த விநாடிகூட அழைத்துக் கொண்டிருப்பதுபோல் ஒரு பிரமை உண்டாகிறதே எனக்கு. தீப்பெட்டிப் படம், உடைந்த சாக்கட்டி, சிலேட்டுக்குச்சி இவைகளைச் சேர்த்துப் பெருமையடித்துக் கொள்வதில்தான்.அந்த நாளில் எனக்கும், அவளுக்கும் எவ்வளவு போட்டி உண்டாகும்?

பொல்லென்று மல்லிகை அரும்புகள் ஒவ்வொன்றாக மலர்ந்து தாமே சரம் கோத்துக் கொண்ட மாதிரி இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒர் அழகோடு சிரிப்பாள் மாயா.மின்சார விளக்கேற்றிக் கொள்கிற விரைவு அந்தச் சிரிப்பு உண்டாகி மறைகிற அவசரத்துக்குச் சரியான உதாரணமாக இருக்கலாம். சரிதானே?

மேலப்பக்கத்து வீட்டில் ஏழு குடித்தனங்களுக்கு நடுவில் ஒர் அறைக்கு வாடகை கொடுத்துக் கொண்டு கஷ்டஜீவனம் நடத்தி வந்தாள் மாயாவின் தாய். ஏதோ சுண்டல், முறுக்கு விற்று வருகிற காசில் வயிறு கழுவ முடிந்தது. அப்பளம் இட்டு விற்பதும் உண்டு. மாயாவுக்கு இரண்டு தங்கைகள், கிழட்டுத்தாய் மூன்று பெண்களையும் வைத்துக் கொண்டு நகர வாசம் செய்வதில் எத்தனை சிரமங்கள் இருக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதேயில்லை. மாயா குடியிருந்த மேற்புறத்து ஸ்டோர் வாசலில் அந்த வேப்பமரத்தடியில்தான் எங்கள் உறவு தளிர்த்தது. வளர்ந்தது, தளர்ந்தது, வாடிற்று. ஆனால் அந்த வேப்பமரம் இன்னும் வாடாமல் தளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மரத்தின் கீழே மண்பரப்பில் 'அப்பா அம்மா விளையாட்டுக்காக' மாயா தோண்டிய அடுப்பு, கிணறு எல்லாம் வடுக்களாகத் தங்கி இருக்கும். மண் எந்த வடுக்களையும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் மனத்தினால் அப்படி நினைவு வைத்துக் கொள்ளாமல் இருக்க முடிவதில்லையே!