பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

குன்றிமணியின் கறுப்புப்போல் வலது கன்னத்தில் புள்ளியாய் வட்டமாய் ஒரு கருப்பு மச்சம் உண்டு மாயாவுக்கு. அவள் சிரிக்கிறபோது அந்த மச்சத்துக்கு எங்கிருந்தோ தனி அழகு வந்துவிடும்.

“ஏண்டா ராஜு! எதுக்குடா இப்பிடி முழுங்கிடறாப் போல என் முகத்தையே பார்க்கிறே? உனக்கு வெட்கமா இல்லையோடா? பெண்டு செட்டி மாதிரி என்னையே எப்பவும் சுத்திண்டிருக்கையே?’ என்று கேலி செய்வாள் மாயா.

“பெண்டு செட்டின்னா என்னடிமாயா? சொல்லேன்” என்று மடக்குவேன் நான்.

“போடா நீ ஒத்தன்! எனக்கு அதெல்லாம் சொல்ல வராது. பெரியவங்க இப்பிடிப் பேசிப்பாங்க கேட்டிருக்கிறேன். அதான் நானும் சொன்னேன்.”

"நீதானடி சொன்னே விளையாட்டிலே நீஅகத்துக்காரி,நான் அகத்துக்காரர்னு?”

"அதுக்காக”

“அகத்துக்காரர்னா அகத்துக்காரி முகத்தைத்தானே பார்க்கணும்?”

“போடா விளையாட்டுக்காக ஒரு இதுக்கு அப்டி வச்சிண்டா, அதுக்காக இப்படித்தான் என்னையே சும்மா பார்த்திண்டிருக்கனுமாக்கும்?”

"நீ ரொம்ப அழகாயிருக்கேடி மாயா! அதனாலேதான் உன்னையே பார்த்திண்டிருக்கேன்”

“நீ கூடத்தான் ரொம்ப அழகாயிருக்கேடா. அதுக்காக நான் உன்னையேவா பார்த்திண்டிருக்கேன்” .

"நான் அப்படித்தான் உன்னைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்."

"நன்னாப்பார்த்துக்கோ.எனக்கென்ன? வவ்வவ்வே.” என்று முகத்தைக் கோணிக் கொண்டு அழகு காட்டுவாள் மாயா.

“இப்படி அழகு காட்டினா நாளையிலேருந்து அப்பா அம்மா விளையாட்டில் நான் அப்பாவா இருக்கமாட்டேண்டி பப்ளிமாஸ் மூஞ்சியும் சோழிப்பல்லுமா இருக்கானே அந்தக் குண்டுராமு, அவனைத்தான் நீ அகத்துக்காரனாவைச்சுக்கணும். நான் உன்னோட விளையாடவே வரமாட்டேன்.”

“வேண்டாண்டா, நீ என்ன வேணாச் சொல்லு பொறுத்துக்கிறேண்டா ராஜு. நீதான் எனக்கு அகத்துக்காரனா இருக்கணும், எத்தனை நாள் விளையாடினாலும் நீதான். எவ்வளவு நாழி வேணுமானாலும் நீ என் மூஞ்சியைப் பார்த்திண்டிரு. நான் உன்னை ஒண்ணும் சொல்லலை” என்று கெஞ்சுவாள் மாயா. அப்படிக் கெஞ்சுகிறபோது அந்தக் கரிவளையல்கள் குலுங்கும் கைகளால் என் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுவாள். பாதி விளையாட்டில் நான் கைவிட்டு ஓடிவிடுவேனோ என்று அவளுக்குப் பயம். ஆனால் இன்று நினைக்கும்போது தெரிகிறது; அவள்தான் இந்த விளையாட்டைப் பாதியில் விட்டு ஒடிவிட்டாள்.