பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / பச்சைக் குழந்தைகள் * 383

அவள்தான் இந்தக் கனவைப் பாதியில் கலைத்துவிட்டு ஒடிப் போய்விட்டாள்! ஆம்! அவளேதான் கலைத்துவிட்டாள்.

குஞ்சும், குளுவானுமாக, விளையாட்டுக்கு வருகிற தெருக் குழந்தைகளையெல்லாம் எங்களுக்குக் குழந்தைகளாக்கிக் கொண்டு அவள் மனைவியாகவும், நான் கணவனாகவும், அப்பா, அம்மா விளையாட்டு விளையாடிய நாட்கள்தான் கணக்கில் அடங்குமா? வேப்ப மரத்தடியில் விளையாட்டுக்காகக் கூடும் குழந்தைகளுள் பெண்ணில் பெரியவள் மாயா. ஆணில் பெரியவர்கள் நானும், பப்ளிமாஸ் மூஞ்சிக் குண்டு ராமுவும்.

விளையாட்டுக்கு ‘மாயா' தான் சர்வாதிகாரி. அவள் அங்கே ஒரு நாளாவது விளையாட்டில் தன்னைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கவில்லையே என்று குண்டு ராமுவுக்கு ஒரே ஆத்திரம்.குறுகுறுவென்று அலைபாயும் கண்களும், சிரிப்பும், நிறமும், அழகுமாக உலா வரும் மாயாவுக்குக் கணவனாக விளையாட்டிலாவது இருந்து பார்த்துவிட வேண்டுமென்று பப்ளிமாஸ் பயலுக்கு ஆசை.

“டேய் ராஜு! நீ மனசு வைச்சால் முடியும்டா, தினம் தினம் விளையாட்டிலே நீயே அப்பாவா வறியே, ஒரு நாளாவது நான் வரவிடப்படாதா?’ என்று பப்ளிமாஸ் என்னிடம் வந்து கெஞ்சினான். “அதுக்கு நான் என்னடா பண்றது? மாயாவுக்கு உன் மூஞ்சியைக் கண்டாலே பிடிக்கலையேடா, நீ கொஞ்சம் அழகாகப் பிறந்து தொலைச்சிருக்கப்படாதோ?” என்றேன்.

பப்ளிமாஸ் அழுதுவிட்டான். குண்டு மூஞ்சியின் கன்னங்களும், உதடும், ஏறி ஏறி இறங்கி விக்கி அழுதான். இந்த விஷயமாக அவன் மனத்தில் இத்தனை ஏக்கம் சேர்ந்து கனத்துப் போயிருக்குமென்று நான் நினைத்திருக்கவில்லை. எனக்கே அவன்மேல் இரக்கம் உண்டாகிவிட்டது.

“டேய்! லூஸ் மாதிரி அழாதே. அழுதால் எனக்குப் பிடிக்காது. உனக்காக நான் என்ன செய்யணும்கிறதை மட்டும் சொல்லிடு செய்துடறேன்.”

பப்ளிமாஸ் அழுவதை நிறுத்தினான். கண்களைத் துடைத்துக் கொண்டான். சோழிப் பல்லைக் காட்டினான். பயலுக்குச் சிரிப்பதாகத்தான் நினைப்பு. மகா கோரமாக இருந்தது. “நீ நாளைக்கு விளையாட்டுக்கு வரப்பிடாது. நீ வராமே இருந்துட்டால் எனக்குத்தான் "சான்ஸ் அடிக்கும்.”

"அவ்வளவுதானேடா?”

“அவ்வளவுதாண்டா, ராஜு:”

“சரிடா நான் நாளைக்கு வரலை நீயே அப்பாவாக இருந்து தொலை”

"இந்த உபகாரத்தை என்னிக்குமே மறக்கமாட்டேண்டா” என்று பப்ளிமாஸ் நன்றி சொல்லிவிட்டுப் போனான்.