பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அவனுக்கு வாக்குக் கொடுத்தபடியே மறுநாள் நான் வேப்பமரத்தடி விளையாட்டுக்குப் போகவில்லை. பாப்பா மலர்ப் பத்திரிகை எடுத்து வைத்துக் கொண்டு ரொம்ப அக்கறையாகக் கதை படிக்கிறவனைப்போல் வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டுவிட்டேன். ஆனால் என்னுடைய மனம் என்னவோ வேப்ப மரத்தடியிலேயே இருந்தது. ‘இன்று பப்ளிமாஸை அகத்துக்காரனாக வைத்துக்கொண்டு மாயா எப்படித் திணறப் போகிறாள்?’ என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன்.அதே சமயத்தில் என்னுடைய உரிமையை அந்தப் பயலுக்கு விட்டுக் கொடுத்ததற்காக வருத்தமும் என் மனத்தில் உண்டாகிக் கொண்டிருந்தது.‘மாயாவின் தங்க நிறக் கைகளைப் பிடித்துக்கொண்டு பெண்டாட்டி உரிமை கொண்டாடி விளையாடுவதற்கு இந்தக் கரித்தடியனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவனை அவளுக்குப் பக்கத்தில் நிறுத்தினால் அவளுடைய அழகுக்குத் திருஷ்டிப் பொம்மை நிறுத்தி வைத்த மாதிரி அல்லவா இருக்கும் என்னவோ, அழுது உபத்திரவம் செய்தானே' என்பதற்காகப் போனால் போகிறதென்று விட்டுக் கொடுத்தேன். இனிமேல் இந்தப் பயலுக்கு இப்படி இரக்கப்படக்கூடாது' என்று தவிப்போடு நான் உட்கார்ந்திருந்தபோது புயல்போலச் சீறிக் கொண்டு மாயாவே வந்து விட்டாள். அவள் எழில் நயனங்களில் நீர் கோத்திருந்தது. முகம் சிவந்திருந்தது. ரோஜாமொட்டுக்கள் காற்றில் படபடப்பதைப் போலச் சிவந்த உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றிக் கொண்டு விறைப்பாக எனக்கு முன் நின்றாள். நான் செய்த தப்பிதம் என்னவென்று புரியாமலும், ஆனால் ஏதோ தப்புச் செய்துவிட்டதாகவும் உணர்ந்து மெல்லத் தலையைத் தாழ்த்திக் கொண்டேன். வெண்தாமரை இதழ்போல் நீண்டகன்ற வெள்ளை விழியில் கறுப்புத் திராட்சை உருள்வதுபோல் கருவிழி புரள அவள் இமையாமல் பார்த்த பார்வையில் நான் பயந்துவிட்டேன்.

“முழிக்கிறதைப் பார். ஆடு திருடின கள்ளன் மாதிரி. நான் இன்னிக்கோடே விளையாட்டை நிறுத்திடப் போறேன்.”

“ஏனாம்?”

"ஏன்னா கேட்கிறே! கேட்பே, கேட்பே. ஏன் கேட்கமாட்டே? உன்னை என்னமோன்னு நினைச்சிண்டிருந்தேன். நீ பெரிய திருட்டுத் தடியன்.” சொற்கள் உடைந்து அழுகையாய்ப் பொங்கிற்று. நெஞ்சு விம்ம உள்ளம் பொரும நின்றாள் மாயா.

"மாயா! தெரியாத்தனமாக இப்படிச் செஞ்சிட்டேண்டி என்னை மன்னிச்சிடுடி அந்தப் பப்ளிமாஸ் வந்து அழுது ஆகாத்தியம் பண்ணித்து, பரிதாபமாக இருந்தது. அசட்டுத்தனமாச் சரின்னுட்டேன். இனிமே எப்பவும் இப்படிச் செய்யமாட்டேண்டி கடவுள் சத்தியமாச் சொல்றேன். உன் கையை நீட்டுடி அதுமேலே அடிச்சுச் சத்தியம் வேணுமானாலும் பண்ணிடறேன்.”

விசுக்கென்று கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் மாயா. அப்பப்பா! அந்தப் பேதை பருவத்துச் சிறுமிக்குக் கோபதாபங்கள் எத்தனை கவர்ச்சியாயிருந்தன!