பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அம்மா. இல்லாட்டா இல்லை. நாளைக்கும் அந்தப் 'பப்ளிமாஸை' அனுப்பிச்சியோ நேரே இங்கே வந்து உன் கன்னத்தைத் திருகிப்பிடுவேன்.”

"திருகினா என் கை ஒண்ணும் புளியங்காய் பறிக்கப் போயிருக்காதுடீ அம்மா!”

"நீயும் பதிலுக்கு என் கன்னத்தைத் திருகுவியோ?”

"ஆமாம்”

"திருகுவே! திருகுவே!"

"திருகுகிறேனா இல்லையான்னுதான் பாரேன்!

“பார்க்கலாம்!”

மாயா வீட்டுக்குப் போய்விட்டாள். நான் மறுபடியும் பாப்பா மலரில் ‘சுண்டெலிக் கதை' படிக்க ஆரம்பித்தேன்.

சைக்கிள் டயர் பஞ்சர் ஆன மாதிரி 'மூஸ் மூஸ்' என்று விசும்பிக் கொண்டே பப்ளிமாஸ் வந்து சேர்ந்தான்.

“என்னடாது? அப்பம் மாதிரி ஒத்தக் கன்னம் மட்டும் வீங்கியிருக்கு? அப்பா அம்மா விளையாட்டிலே சமையல் பண்றபோது மாயா இன்னிக்கு அப்பம் பண்ணிக் கொடுத்தாளாக்கும்?” என்று சிரித்துக் கொண்டே ஒன்றும் தெரியாதவன்போல் கேட்டேன்.

“போடா உனக்கு எப்பவும் வேடிக்கைதான். மாயா அடிச்சுட்டாடா ராஜு! 'ராஜுதான் இன்னிக்கு என்னை அப்பாவா இருக்கச்சொல்லி அனுப்பினான்'னுேகூடச் சொல்லிப் பார்த்தேண்டா. அவள் கேக்கலைடா. 'ஒரு அகத்துக்காரிக்கு ஒரு அகத்துக்காரர்தான் இருக்க முடியும்னு அந்த ராஜு கிட்டப் போய்ச் சொல்லுடா'ன்னு பலமா அறைஞ்சுட்டா'.'

"அப்புறம்”

“போடா! நான் அடிபட்டு வந்து நிக்கறேன். உனக்குக் கதை கேட்கிற மாதிரி இருக்கு வேணும்னு நீயே அடிக்கச் சொன்னாலும் சொல்லியிருப்பே!

“சே! சே! அப்படியெல்லாம் இல்லைடா குண்டு! உன்னை நான் அப்படிச் செய்வேனா? கட்டாயம் இன்னொரு நாள் உன்னை அப்பாவாக்கிடறேன். இன்னிக்கு நீ போயிட்டு வா”

குண்டு பப்ளிமாஸ் விசும்பிக் கொண்டே நகர்ந்தான். இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முடியாமல் சிரித்தேன் நான்.

‘விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சலம் மாதிரி உனக்கு மாயா வேணுமாடா தடி ராஸ்கல்! வீட்டுக்குப் போய்க் கண்ணாடியிலே உன் முகத்தைப் பார்த்துக்கோடா, அப்போ தெரியும் உன் அழகு!'

மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன்.