பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“முறுக்கு ரொம்ப நன்னாயிருக்குடி!”

***

ப்படி எத்தனை பசுமைச் சம்பவங்கள்! ஒன்றா இரண்டா எண்ணிச் சொல்வதற்கு?

கடைசியில் இந்தச் சம்பவங்களுக்கு ஒரு முடிவு காலமும் வந்தது. ஒருநாள் காலை மூஞ்சியை 'உம்'மென்று தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள் மாயா,

“என்னடி மாயா, என்னவோ மாதிரி இருக்கே?”

“நாங்க ஒழிச்சுண்டு வேறே ஊருக்குப் போறோம்டா ராஜா!”

அவள் கண்களில் நீர் மல்கியது. “ஏண்டீ? எதுக்காக வேறே ஊருக்குப் போகணுமாம்?”

“இந்த ஊர்லே இந்தச் சுண்டல் முறுக்கு வியாபாரத்திலே கிடைக்கிறது போறலையாம். கொஞ்சநாளாப் போட்ட சரக்கெல்லாம் விற்காமே அப்படி அப்படியே மிஞ்சுடறது.டா! தெருக்கோடியிலே 'ஸ்வீட் ஸ்டால்’னு ஒருத்தன் வைச்சுட்டான். ஜனங்கெல்லாம் அங்கேதான் குவியறா. எங்க வியாபாரம் படுத்துப்போச்சு. அம்மா பக்கத்து டவுண்லே ஒரு பெரிய மனுஷர் வீட்டிலே சமையலுக்கு வரதாக ஒப்புக் கொண்டிருக்கா. நானும் அவர் வீட்டிலே தெளிச்சிப் பெருக்கி எடுபிடி வேலையெல்லாம் செய்வேன். ரெண்டு பேருக்குமாச் சேர்ந்து மாசம் மாசம் ஏதோ கிடைக்குமாம். அதை வச்சுண்டு நாங்க பிழைச்சுப்போம்.”

“ஏண்டி மாயா,இந்த ஊரிலேயே அந்த மாதிரி வேலை உங்கம்மாவுக்கும் உனக்கும் கிடைக்காதா?”

"இந்த ஊரிலே அப்படிச் சமையல்காராள் வச்சிக்கறாப்பலே யாருடா இருக்கா? வச்சிண்டா உங்கப்பாதான் வச்சுக்கலாம். பெரிய மிராசுதார், பணக்காரர்.”

"நீ சொல்றது சரிதான். ஆனால் தொந்தியும் தொப்பையுமா எங்க வீட்டிலேயே யானை மாதிரி ஒரு சமையற்காரர் இருக்காரேடி? அப்பாவுக்கு அந்த ஆள் சமையலில் கொள்ளைப் பிரியமாச்சே!”

"வேறென்ன செய்யறது? அதான் அம்மா வெளியூரிலே வேலை ஒப்புக் கொண்டுட்டா, நாங்க போறதுன்னு உறுதி பண்ணிண்டாச்சு. இருக்கிற கடனலெல்லாம் அடைக்கிறதுக்காக அம்மாகூட நேத்துப் பழைய சிவப்புக்கல் தோட்டை வித்துட்டு வந்துட்டாள்.”

“என்னிக்கு நீங்க புறப்படப் போறதாகத் தீர்மானம்?”

“வெள்ளிக்கிழமை போறோம்.”

“போனா இங்கு வரவே மாட்டியா?” - எனக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது. பேச்சு வரவில்லை.அழுகை பீறிக் கொண்டு வந்தது.