பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / பச்சைக் குழந்தைகள் 389

"நீ எதுக்குடா அசடு மாதிரி அழறே?”

“இனிமே உன்னைப் பார்க்க முடியாதேடி, மாயா?”

“அதுக்கென்ன செய்யறதுடா?”

“இன்னிக்கு விளையாட்டு உண்டோ இல்லையோடி?'’

“உண்டு! கடைசியா இன்னிக்கு அப்பா அம்மா விளையாட்டு விளையாடிவிட்டுச் சொப்பெல்லாம் பிரிச்சுண்டுடலாம்னு நினைக்கிறேன். என்னோட சொப்பு உங்கிட்ட ஒண்ணும் கிடையாது. உன்னோடதுதான் எங்கிட்ட வண்டி வண்டியாகக் குமிஞ்சி கிடக்கு. அதையெல்லாம் பிரிச்சு உங்கிட்ட ஒப்படைச்சிடணும் என்னோடதுன்னு ஒண்ணுமே இல்லைடா. ரெண்டே ரெண்டு மரப்பாச்சிதாண்டா இருக்கு. ஒண்ணுதான் முழுசு, இன்னொன்னு கையொடிஞ்சது. மத்ததெல்லாம் உன்னோடதுதான்” என்று ஏக்கம் பொங்கச் சொன்னாள் மாயா.

அன்றைய விளையாட்டு ஆரம்பமாயிற்று. பொய்யாக அடுப்பு மூட்டிப் பொய்ச் சமையல் பண்ணிப் பொய் இலை போட்டுப் பொய்யாகப் பரிமாறிப் பொய்யாகச் சாப்பிடுவது போல் பாவனை பண்ணுவதுதான் வழக்கமான விளையாட்டு. அன்றும் அப்படி நினைத்துக் கொண்டுதான் இலையில் (இலை என்று மாயா காட்டின இடத்தில்) உட்கார்ந்து கொண்டேன்.

மடியிலிருந்து ஒரு லட்டு உருண்டையை எடுத்துக் 'காக்காய்க் கடி' கடித்துப் பாதியை என்னிடம் நீட்டினாள் மாயா.

"இதென்னடீ இன்னிக்கு விளையாட்டுப் புது மாதிரி இருக்கிறது. பொய்யாகச் சாப்பிடுவதுபோல் நாக்கைச் சப்புக் கொட்டச் சொல்லி என் உயிரை வாங்குவாய். இன்றைக்கென்னவோ நிஜமாகவே சாப்பிடச் சொல்றயே?”

“இன்னிக்கு இப்படித்தான் சாப்பிடு!” அவள் கெஞ்சினாள் நான் சாப்பிட்டேன்.

“இந்தாடா ராஜா, கணக்கெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோ.அப்புறம் என்னைத் 'திருடீ'ங்காதே. எழுவது தீப்பெட்டிப் படம், முப்பது சாக்பீஸ், நூத்தி இருபது குச்சி, பத்துப் பழுக்காச் சொப்பு, உடைஞ்ச சொப்பு நாலு எல்லாம் உன்னோடது, எடுத்துக்கோ, இந்த ரெண்டு மரப்பாச்சி மட்டும் என்னோடது. நான் எடுத்துக்கறேன்.” நான் பதில் சொல்லாமல் அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தேன்.

“ஏண்டா இப்படிச் சிரிக்கிறே?”

“ஒண்ணுமில்லேடீ மாயா. உன்னைப் பார்த்தேன், சிரிப்பு வந்தது. எனக்கு இதெல்லாம் வேண்டாம். உனக்கே எல்லாத்தையும் கொடுத்துடறேன். நீயே வைச்சுக்கோ. அந்தக் கை ஒடிஞ்ச மரப்பாச்சியை மட்டும் எங்கிட்டக் கொடுத்துடு . “நான் அதைத் தரமாட்டேன் போ!”

“மாட்டாட்டா எனக்கு ஒண்ணுமே தர வேண்டாம். எல்லாத்தையும் நீயே எடுத்திண்டு போ. நான் போறேன்” என்று கோபித்துக் கொண்டு கிளம்பினேன்.