பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

"இல்லேடா இல்லே! கோபிச்சுண்டு போகாதே. நான் பொய்க்காகச் சொன்னேன். இந்தா, இதை நீயே வைச்சுக்கோ” என்று பின்னால் ஓடிவந்து என் கையைப் பிடித்து இழுத்து அந்த மூளி மரப்பாச்சியைத் திணித்தாள் அவள்.

“ஏண்டி இதிருக்கட்டும். உன்னை ஒண்ணு கேக்கறேன், நீ பதில் சொல்லுவியோ?”

கேளேண்டா? என்ன கேக்கப் போறே?”

“புது ஊருக்குப் போறியே, அங்கே அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவியோ, இல்லையோ?”

இந்தக் கேள்விக்குமாயா உடனே மறுமொழி சொல்ல வில்லை. தயங்கினாள்.என் முகத்தைப் பார்த்தாள். கண்கலங்கி நின்றாள்.

"பதில் சொல்லேண்டீ மாயா விளையாடுவியோ இல்லியோ?”

“எப்படிடா ராஜா விளையாடுவேன்? புதுசாப் போகிற ஊர்லே அப்பா இல்லியே!”

"நான் இல்லாட்டா என்னடீம்மா? அங்கே உனக்கு வேறொரு பையன் கிடைக்கமாட்டானா?”

தரையில் உட்கார்ந்து முகத்தை மூடிக் கொண்டு விம்மி விம்மி அழலானாள் மாயா எனக்கு அவளை ஏன் அப்படிக் கேட்டோமென்று வருத்தமாகிவிட்டது.

"நான் கேட்டது தப்பானால் மன்னிச்சுடுடீ!"

"உன்னை மன்னிக்கப்படாதுடா, கடன்காரா! கன்னத்திலே பளிர்னு அறையணும்.”

"அறையேண்டி கடன்காரி!

மாயா சிரித்தாள். நானும் சிரித்தேன்.

***

ன்ன இது? குளித்துச் சாப்பிட்டு ஆபீசுக்குப் போகப் போகிறீர்களா இல்லையா? இப்படியே பரணில் உட்கார்ந்து பச்சைக் குழந்தை மாதிரி மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறீர்களோ?” என்று கீழே இருந்து மனைவி கூச்சல் போட்டாள். நான் என் புலன்களை ஒடுக்க நிலையிலிருந்து வெளிப்படுத்திக் கொண்டு பழைய நினைவுகளிலிருந்து வெளிவருகிறேன். என்னுடைய சொந்த அப்பா அம்மாவியைாட்டு நினைவு வருகிறது. இப்படி அவள் எங்கேயாரிடம் விளையாடிக் கொண்டிருக்கிறாளோ? அந்த விளையாட்டுக்கு நாயகன் யாரோ?

பரணிலிருந்து கீழே இறங்குகிறேன். ஏணியடியில் விழுந்து கிடந்த அந்த மரப்பாச்சியைக் காணவில்லை.

“இந்தா, இங்கே ஒரு மரப்பாச்சி விழுந்து கிடந்ததே. பார்த்தாயோ?”